Friday, October 30, 2015

இயற்கை விவசாயம் பற்றிய முழுமையான பதிவு இது.

இயற்கை வேளாண்மையை நோக்கி ஓர் இனிய பயணம்...!!!



உழவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கெல்லாம் காரணம் விவசாயத்தை பற்றிய சரியான புரிதல் இல்லாமையும், ரசாயனங்களை நம்பியதாலும் தான்.
“சுழன்றும் ஏர் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை”
உலகில் எண்ணற்ற தொழில்கள் நடந்து வந்தாலும் ஏர்த்தொழிலாம் விவசாயத்தின் பின்னால் தான் இந்த உலகம் இயங்குகின்றது. விவசாயம் தான் உலக ஜீவராசிகள் அனைத்திற்கும் உயிர் ஊட்டுகிறது.
தரணியைக் காக்கும் தலையாய தொழிலாம் வேளாண்மை, ஆண்டவனால் அனுப்பப்பட்ட ஆதி மனிதன் காலத்திலிருந்தே நடந்து வருகிறது. மனிதன் நாகரிகம் அடைவதற்கு வழிவகுத்தது விவசாயம் தான்.
வேளாண்மை என்பது உலக உயிர்களின் பசியைப் போக்குவதற்கு பயிர்களை விளைவிப்பதாகும்.
இன்று உலகில் பல்வேறு மக்கள் பல முறைகளில் வேளாண்மை செய்கின்றனர், அதில் பண்பட்ட மக்கள் மண்ணைப் புண்படுத்தாத இயற்கை வேளாண்மை செய்கின்றனர்.
இயற்கை பற்றாளர்
இயற்கை வேளாண்மை பற்றி பேசும் இந்த நேரத்தில் நாம் கண்டிப்பாக இயற்கை வேளாண்மையின் தந்தை மசானபு ஃபுகோகா அவர்களை பற்றியும், அவர்களின் கருத்துகளைப் பற்றியும் இங்கு கட்டாயம் நினைவு கூற வேண்டும். ஜப்பான் நாட்டை சேர்ந்த ஃபூகோகா அவர்கள் இயற்கையின் பின்னணியில் செடிகள் வளர்ப்பில் பல ஆராய்ச்சிகள் செய்து தமது “ஒற்றை வைக்கோல் புரட்சி” எனும் நூலின் மூலம் இவ்வுலகிற்கு இயற்கை வேளாண்மையின் .இன்றியமையாமை பற்றி எடுத்தியம்பினார்.
அவர் தன் நூலில் இயற்கை வேளாண்மைக்கு என சில
கொள்கைகளை கூறுகின்றார். அவை
௧. எந்த ஒரு இரசாயன உரங்களும் தேவை இல்லை
௨. பூச்சிக்கொல்லி மருந்துகள் தேவை இல்லை
௩. அடிக்கடி களை எடுக்கத்தேவை இல்லை
௪. அடிக்கடி மண்ணை உழத்தேவை இல்லை
௫. இயந்திரங்களும் தேவை இல்லை
இயற்கையே அனைத்தையும் நிகழ்த்தும், மனிதன் எதுவும் செய்யத் தேவை இல்லை என்கிறார். அவருடைய ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டு இன்று உலகில் பல இடங்களில் இயற்கை விவசாயம் நடை பெற்று வருகிறது .
இயற்கை வேளாண்மை
இயற்கை வேளாண்மை என்பது இயற்கையின் இதயத்தை இம்சைப்படுத்தாமல் செய்வது, இயற்கையின் போக்கில் இணைந்து விவசாயம் செய்வது.இயற்கையினுள் செயற்கையை புகுத்தாமல் இயற்கையை இதமாக அதன் போக்கில் விடுவது,இரசாயனத்தைப் புகுத்தி இயற்கையை ரணப்படுத்தாமல் இருப்பது.
இயற்கை வேளாண்மை என்பது உயிருக்கு தீங்கு விளைவிக்கின்ற இரசாயன உரங்களையோ, வேதியியல் பூச்சிக்கொல்லிகளையோ, களைகொள்ளிகளையோ பயன்படுத்தாமல் இயற்கை முறையில் விவசாயம் செய்வதாகும். இயற்கை வேளாண்மைக்கு எனத் தனியாக எந்தவொரு கொள்கைகளும் வகுக்கப்படவில்லை.
இயற்கை வேளாண்மையில் முக்கியமானது பயிர் சுழற்சி முறை மற்றும் கலப்பு பயிர்கள் பயிருடுதலாகும்.
பறவைகளைப் பார்த்து பறக்க கற்றுக்கொண்டோம்
மீன்களைப் பார்த்து நீந்த கற்றுக்கொண்டோம்
இயற்கையை ஆழ்ந்து கவனித்தாலே இயற்கை வேளாண்மையை கற்றுக்கொள்வோம்
இயற்கை வேளாண்மை என்பது “இயற்கையின் சுழற்சிகளை மையமாக கொண்டு செயல்படும் வேளாண்மை முறை” இயற்கையின் போக்கில் இணைந்து விவசாயம் செய்வது தான் இயற்கை வேளாண்மை. காட்டிலுள்ள மரங்களை பார்த்தாலே இயற்கை வேளாண்மையை கற்று கொள்ளலாம். காட்டில் யாரும் விதைகளை விதைப்பதும் இல்லை, உழுவதும் இல்லை, களைஎடுப்பதும் இல்லை அவை தானாகவே வளருகின்றன. அதன் நல்வளர்ச்சிக்கு காரணம் நல்ல வளமான மண் அங்கு இருப்பதேயாகும், மேலும் மரங்களிலிருந்து விழும் இலை தழைகள் போன்றவை அப்படியே நிலத்தில் விழுந்து மூடாக்காகி மண்ணிற்கு ஈரப்பதத்தை கொடுகின்றது, இது தான் இயற்கை வேளாண்மையின் அடிப்படை.
நாமும் இதே போல “ஏதும் செய்யாத வேளாண்மை”யை செய்யலாம், ஆனால் இன்றிருக்கும் நிலையில் நம் மண் வளம் தரமற்றதாகிவிட்டது, மலடாகிய மண்ணை நல்ல மகசூல் கிடைக்கும் மண்ணாக மாற்ற நாம் சில தொழில்நுட்பங்களை இயற்கை வேளாண்மையில் புகுத்த வேண்டும். அவை பயிர் சுழற்சி முறை, கலப்பு பயிர் பயிருடுதல், உயிர் பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றை பயன்படுத்துவதாகும். மேலும் ஒற்றை நாற்று நடவு, மூடாக்கி போடுதல், உரக்குழிகள் வெட்டுதல், பயிர்களுக்கு இடையே காற்றோட்டத்தை பராமரிப்பது, நாட்டு விதைகளை பயன்படுத்துவது போன்ற தொழில்நுட்பங்களும் இயற்கை வேளாண்மையுடன் இணைந்ததாகும்.
பாரம்பரிய வேளாண்மை
“ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்னும் பழமொழிக்கேற்ப உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் நடக்கும் இயற்கை வேளாண்மை பற்றி ஆராய இங்கு முடியாததால் நம் தாய் திருநாடான இந்தியாவில் நடக்கும் இயற்கை வேளாண்மை பற்றி மட்டும் இக்கட்டுரையில் எடுத்தியம்பியிருக்கிறேன்.
இந்தியாவின் முதுகெலும்பே விவசாயம் தான். அதன் புகழை தரணியில் உயர்த்தியதே அதன் தங்கப்புதல்வர்கள், தவப்புதல்வர்களாகிய விவசாயிகள் தான்.
அதனால் தான் நமது முன்னால் பிரதமர் திரு. லால் பகதூர் சாஸ்திரி அவர்கள் “ஜெய் ஜவான், ஜெய் கிஸான்” எனப்புகழ்கின்றார். இந்திய மக்கள் தொகையில் 64சதவீத மக்கள் விவசாயத்தை முழு நேரத்தொழிலாக செய்து வருகின்றனர்.
“இனிய பொழில்கள் நெடிய வயல்கள்
எண்ணரும் பெருநாடு
கனியும் கிழங்கும் தானியங்களும்
கணக்கின்றி தரு நாடு”
– என்று முண்டாசு கவிஞன் பாரதியால் புகழப்பட்ட நம்
நாட்டில் இயற்கை வேளாண்மை என்பது நாம் மூதாதையர்களின் காலத்திலிருந்தே நடந்து வருகிறது. நம் சங்க இலக்கிய நூல்கலான புறநானூறு, குறுந்தொகை போன்றவற்றில் கூட இயற்கை வேளாண்மை பற்றி பல குறிப்புகள் உள்ளன.
நம் முன்னோர்கள் எந்த ஒரு இரசாயன உரங்களையோ, களைகொள்ளிகளையோ பயன்படுத்தாதலால் தான் மாடு கட்டி போரடித்தால் மாளாது என யானை கட்டி போரடித்தனர், அதிகளவு மகசூல் பெற்றனர்.
தமிழ் மறையாம் திருக்குறளிலும் வேளாண்மையைப் பற்றிய பல குறிப்புகள் உள்ளன.
“தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்”
-உழவன், ஒரு பலம் புழுதி கால்பலமாகும் படி தன் நிலத்தை உழுது காய விட்டால், ஒரு பிடி எருவும் இடாமலேயே அந்நிலத்தில் பயிர் செழித்து வளரும்.
இக்குறளின் மூலம் உழுதலின் அவசியத்தை புரிந்து கொள்கின்றோம், நன்கு உழுவதன் மூலம் காற்றோட்டம் அதிகமாகிறது. நிலத்தில் உள்ள இலை தழை போன்றவையெல்லாம் மட்கி நல்லதொரு வளத்தை மண்ணிற்கு கொடுகின்றது என அறிகின்றோம்.
திருவள்ளுவர் உழவு எனும் அதிகாரத்திலேயே விவசாயம் பற்றிய பல விசயங்களை புரிய வைக்கின்றார்.
“ஏரினும் நன்றால் எரு இடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு”
- ஏர் விட்டு உழுதலை விட எரு இடுதல் நல்லது, இவ்விரண்டும் செய்து களை எடுத்த பிறகு நீர் பாய்ச்சுவதை விட பயிரை அழியாமல் காப்பது நல்லது” – எனும் குறலின் மூலம் நம் முன்னோர்கள் பயிர்களுக்கு இயற்கை முறையில் எரு போன்ற இயற்கை உரங்களை பயன்படுத்தியதை அறிகிறோம், மேலும் வேளாண்மைக்கு எது சிறந்ததென ஒரு குறலின் மூலமே அறிகிறோம்.
ரிக் வேத காலத்திலிருந்தே நம் முன்னோர்கள் பயிர்களுக்கு வளம் ஊட்ட பசு மாட்டின் பால்,நெய்,தயிர்,கோமியம் மற்றும் வெண்ணை போன்றவற்றின் கலவையான பஞ்சகவ்யாவை பயன்படுத்தி வந்துள்ளனர். மேலும் விதைகளை விதைக்க மூங்கில் விதைப்பான் போன்ற ஆயுதங்களையும் பயன்படுத்தி வந்துள்ளனர்.
தேவை ஒரு மாற்றம்
“யானைக்கும் அடி சறுக்கும்” என்பார்களே அது போல விவசாயத்திலும் அதிக வளர்ச்சிகளை கொண்டிருந்த நம் நாட்டிலும் 1960-65 ஆம் ஆண்டுகளில் கடும் பட்டினி,பஞ்சம் ஏற்பட்டது.
மக்களின் பஞ்சத்தை போக்க இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம், வேளாண் பல்கலைக்கழகங்கள் ஆகியவை சர்வதேச ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து ஆராய்ச்சி செய்தன, அதன் மூலம் நாம் பயிர் விளைச்சலில் தன்னிறைவு அடைந்தோம். ஆனால் நாம் பாரம்பரிய முறைகளை கைவிட்டு ரசாயன உரங்களையும், வேதியியல் பூச்சிக்கொல்லிகளையும், களைக்கொல்லிகளையும் நம் உடமையாக ஆக்கிக்கொண்டோம். ரசாயன உரங்களுக்கும் பூச்சிக்கொல்லிகளுக்கும் மானியம் கிடைக்கிறது என்ற காரணத்திற்காகவும் அதனை பயன்படுத்துவதால் மகசூல் கூடுகிறது என்ற எண்ணத்தினாலும் நவீன கால வேளாண்மையான ரசாயனங்களை மையமாக கொண்ட வேளாண்மை நம்மை நன்கு ஆக்கிரமித்து கொண்டது.இதன் விளைவாக நாம் வளமான மண் மலடாகியது, பொன் விளையும் பூமி இன்று புண்ணாகியது.
பசுமை புரட்சி பூச்சிக்கொல்லி மற்றும் கலப்பு நைட்ரஜன் போன்றவற்றை வளர்ந்த நாடுகளிடமிறந்து வளரும் நாடுகளுக்கு அளிக்க வழி செய்தது. இதன் விளைவாக வளர்ந்த நாடுகளின் நிறுவனங்கள் வளர்ந்ததே தவிர வளரும் நாடான நம் நாட்டிற்கு எந்த பயனும் இல்லை. ரசாயன உரங்களை பயன்படுத்தியதன் விளைவாக நாம் இன்று பல நோய்களை அனுபவிக்கின்றோம் நீரழிவு, புற்றுநோய், மலட்டுதன்மை, பிறவி ஊனம், கண் பார்வை குறைவு போன்ற பல நோய்கள் இன்று எங்கும் பரவியதற்கு காரணம் நம் மண்ணில் கலந்துள்ள ரசாயன மற்றும் பூச்சிக்கொல்லி இவற்றின் எச்சங்களால் தான். இப்படி நச்சு தாக்கிய மண்ணில் விளைந்த காய் கறிகளை உண்ணும் பொழுது நம் உடம்பிற்குள்ளும் நச்சு நுழைந்து விடுகிறது.
இன்று விவசாயம் என்னும் பெயரில் பயிர்களுக்கு விஷச்சாயம் பூசும் பணி நடக்கின்றது. “சர்வதேச ஆய்வறிக்கையின்படி மகசூலும் மண் வளமும் நேர்விகிதத்தில் உள்ளது. மண் வளத்தை பொறுத்துதான் மகசூல் உள்ளது. இந்திய மண் வளத்தை ஆராய்ந்த சர்வேதேச ஆய்வுக்குழு நம் மண்ணில் இரும்பு, மாலிப்பிடினத்தை தவிர பிற சத்துக்களான பாஸ்பரஸ், மக்னீஷியம், போரான், துத்தநாகம் போன்றவை குறைவாக உள்ளதாக கூறிக்கின்றது.” வளமான மண் இன்று வளம் குன்றி கலங்கமானதற்கு விவசாயத்தில் ரசாயன பூச்சிக்கொல்லிகளையும் உரங்களையும் பயன்படுத்தியதே காரணம்.
“சென்றதினி மீளாது மூடரே” எனும் பாரதியின் வாக்கிற்கு ஏற்ப கடந்தததை நினைத்து வருந்தாமல், நாம் செய்த தவற்றை திருத்த இதுவே உகந்த நேரம். நம் வருங்கால சந்ததியினர் வளமுடன் வாழ வேண்டுமென்றால், வளம் குன்றிய மண்ணை அவர்கள் வசமாக்காமாலிருக்க வேண்டுமென்றால் அதற்கு ஒரே தீர்வு, நிரந்தரதீர்வு நாம் அனைவரும் இயற்கை வேளாண்மையை கடைப்பிடிப்பதாகும்.
தற்கால நவீன விவசாயத்தில் அதிக அளவு ரசாயன உரங்களை பயன்படுத்தியதன் விளைவாக முதலில் மகசூல் அதிகமானாலும், பின்னால் மண்ணின் வளம் குன்றி விவசாயத்தின் வளர்ச்சி குன்றி விட்டது. சுற்றுசூழல் சீர்கேட்டையும், மனித ஆரோகியத்தையும் கெடுத்து விட்டன.
“தேசிய குற்ற ஆவண அமைப்பின் கணக்கெடுப்பின் படி 1997 லிருந்து 2007ம் ஆண்டு வரை தற்கொலை செய்து கொண்ட இந்திய விவசாயிகளின் எண்ணிக்கை 1லட்சத்து 82 ஆயிரத்து 936 ஆகும்.
“பலகுடை நீழலும்தம் குடைக்கீழ்க் காண்பார்
அலகுடை நீழலவர்”
– அரசாளும் மன்னர்களே ஆனாலும் உலகுக்கு உணவு படைக்கும் விவசாயியின் குடையின் கீழ்தான் இருப்பர் என்றார் வள்ளுவர்.
அப்படி உயர்வாக புகழபெற்ற உழவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கெல்லாம் காரணம் விவசாயத்தை பற்றிய சரியான புரிதல் இல்லாமையும், ரசாயனங்களை நம்பியதாலும் தான். ஆனால் இயற்கை விவசாயத்தில் ரசாயனம் என்ற பேச்சிற்கே இடமில்லை.
செடி வளர்வதற்கு தேவையான தழைச்சத்து (நைட்ரஜன்) கிடைப்பதற்கு நாம் நவீன ரசாயானத்தை மையமாகக்கொண்ட விவசாயத்தில் யூரியா போன்ற உரங்களை போடுகின்றோம். ரசாயன உரங்களில் உள்ள நைட்ரேட் மழைபெய்யும் காலங்களில் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு நிலத்தடி நீரை அசுத்தப்படுத்துகிறது. இப்படி சுற்றுசூழலை மாசடைய செய்யும் வேலை இயற்கை வேளாண்மையில் இல்லவே இல்லை.
இயற்கை வேளாண்மை முறையில் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து போன்றவை கிடைப்பதற்கு பல வழிகள் உள்ளன. அவற்றுள் ஒன்றுதான் கலப்பு பயிர் முறை. ரைசோபியம் எனும் பாக்டீரியா தான் தழைச்சத்தை வளிமண்டலத்திலிருந்து கிரகித்து செடிகளுக்கு கொடுக்கிறது. கலப்பு பயிராக நாம் துவரை, அவரை போன்ற இரு வித்திலை தாவரங்களை பயிரிடும்போது ரைசோபியம் எனும் பாக்டீரியாக்கள் அத்தாவரங்களின் வேர் முடிச்சுககளில் பல்கி பெருகுகின்றது. இதனால் மண்ணிற்கு தழைச்சத்து கூடுகிறது மண்ணும் வளமடைகிறது.
பயிர் சுழற்சிமுறை
நிலத்தில் ஒரே வகையான பயிர்களை பயிரிடாமல் சுழற்சி முறையில் பயிரிட வேண்டும்
இயற்கை வேளாண்மையின் முக்கிய அம்சமான பயிர் சுழற்சி முறையை நம் முன்னோர்கள் முறையாக செய்தனர். முதல் பருவத்தில் நெல், அடுத்த பருவத்தில் உளுந்து , அதற்கடுத்து பயறுவகைகள் என மாறி மாறி பயிரிட்டனர். பயிர் சுழற்சி முறையினால் மண்ணின் வளம் கூடும் என நன்கு தெரிந்திருந்தனர்.
இயற்கை வேளாண்மையில் சம்பா நெல்லுக்கு பிறகு உளுந்து, குறுவை நெல்லுக்கு பிறகு தாளடி நெல், அதற்கு பிறகு சம்பா நெல் அதனூடே சணப்பு இப்படித்தான் மாற்றி மாற்றி பயிர் செய்ய வேண்டும். முதலில் சணப்பு விளைந்த பின் அதன் விதையை நீக்கி மூடாக்கி போட்டால் நல்லதொரு உரமாக மாறும். இன்று நம் விவசாயிகள் இதே முறையை பின்பற்றுகின்றனர்.
பயிரின் வளத்தை தீர்மானிப்பது மேல் மண்ணாகும், மேலும் நிலத்தை சில நாட்கள் தரிசாக போட்டு வைத்தொமென்றால் , களைத்துபோன நிலம் புத்துயிர் பெறுகிறது. பல்லாயிரம் வருடங்களாகவே இந்த யுக்தியை நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்துள்ளனர், இப்படி மண்ணை தரிசாக போட்டு வைக்கும் போது அம்மண்ணில் கொழிஞ்சி, அவுரி, கரந்தை உள்ளிட்ட செடிகள் முளைத்து ஈரத்தை தக்க வைக்கின்றன, மேலும் பயிர் விளைவிக்க அந்த மண்ணை உழும் பொழுது அச்செடிகளை மடக்கி போட்டால் நல்லதொரு உரமாக மாறுகின்றது.
கலப்பு பயிர்களின் நன்மை
பழங்காலத்திலிருந்தே நம் முன்னோர்கள் பலதரப்பட்ட பயிர் வகைகளை கலந்து பயிரிட்டு வந்தனர், இப்படி கலந்து பயிரிடுவதால் ஒரு செடியின் தேவையை மற்றொரு செடி நிறைவேற்றும். எடுத்துக்காட்டாக தக்காளி மற்றும் சணப்பு கலந்து பயிரிட்டனர்.இதன் மூலம் தக்காளி மகசூல் கூடியது, சோளத்துடன் தட்டை பயிரை கலந்து பயிரிடும் போது தட்டை பயிரின் நெடி சோளத்தைத் தாக்கும் தண்டு தாக்குதல் நோயைத் தடுக்கும்.
மதுரை திருமங்கலம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கலப்பு பயிராக பருத்தியை சாகுபடி செய்கின்றனர். பாசிப்பயறு, துவரை, மொச்சை, கேழ்விரகு, சோளம் , உளுந்து என பல பயிர்களுடன் கலந்து பருத்தியை விதைத்திருக்கின்றனர். இதன் மூலமாக பருத்தியை தாக்கும் காய் புழுக்கள் கட்டுப்படுத்தபட்டிருகின்றன, முற்றிலும் அழிக்கப்படுகின்றன.
பருத்தியை தாக்கும் காய் புழுக்கள் பருத்தியை தாக்கிவிட்டு ஒரு செடியிலிருந்து மற்றொன்றுக்குத் தாவுகின்றது. அடுத்த செடியில் அவை வேறு வித சுவையையும் தன்மையயும் உணருகின்றன, இதனால் அதற்கடுத்த செடிக்கு தாவுகின்றன. அங்கும் அவை வேறு சுவயை உணர்வதால் ஒவ்வாமை நோய் ஏற்பட்டு வயல்களை விட்டே ஓடிவிடுகிறது, மேலும் கலப்பு பயிரான பாசிப்பயிறு, மொச்சை போன்றவற்றை அறுவடை செய்தபின் அவற்றை மூடாக்கி போட்டால் மண்ணிற்கு வளமும் கூடுகின்றது, தென்னை மரத்திற்கு நடுவே பப்பாளி, பாக்கு ஆகியவற்றை கலப்பு பாயிராக நடலாம். இன்று மரபணு மாற்றப்பட்ட பருத்தி, கத்திரியைப்பற்றி பல சர்ச்சைகள் கிளம்பும் இந்நேரத்தில் நம் விவசாயிகள் இயற்கை முறையில் பருத்தியை விளைவிப்பதும், அதன் காய் புழுக்களை கட்டுப்படுத்துவதும் நம் இயற்கை வேளாண்மை முறையால் தான் சாத்தியமாயிற்று. இதுபோல் கலப்புப்பயிர் முறையில் பல நன்மைகள் உள்ளன.
இயற்கை பூச்சிவிரட்டி
ஜெர்மனியை சேர்ந்த பால் முல்லர் என்பவர் 1942ம் வருடம் பூச்சிகளைக் கொள்வதற்காக டீடீபி பூச்சிக்கொல்லியை கண்டு பிடித்தார். பூச்சிகளில் நன்மை செய்யும் மற்றும் தீமை செய்யும் பூச்சிகள் உள்ளன, சிலந்தி, ஊசித்தட்டான், மண்புழு, நண்டு, நத்தை ஆகியவை நன்மை செயும் பூச்சிகள் ஆகும். பச்சைக்காய் புழுக்கள், தரை வண்டுகள், காண்டாமிருக வண்டுகள், அசுவினி, வெள்ளை ஈ, கத்தாழை பூச்சி, குருத்துப்புழு, இடைக்கணு புழு ஆகியவை தீமை செய்யும் பூச்சிகள் ஆகும்.
நம் முன்னோர்கள் பூச்சிகளில் நன்மை மற்றும் தீமை
செய்யும் பூச்சிகளைப்பற்றி அறிந்து இருந்தனர் ., ரசாயன பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தும்போது பூச்சிகளில் உள்ள நன்மை செய்யும் பூச்சிகளும் இறந்து விடுகின்றன. எனவேஇயற்கை மூலிகைகளை வைத்தே பூச்சிகளை விரட்டினார்கள். அவர்கள் பயறுகளில் உள்ள பூச்சிகளைய் நீக்க மிளகாய்வற்றல், மிளகு, காய்ந்த வேப்பிலை போன்ற பொருட்களை உபயோகப்படுத்தினர்.
இன்று இயற்கை விவசாயத்தில் ஈடுபடுகிறவர்கள் இப்பூச்சிகளின் தன்மையை அறிந்திருக்கின்றனர். அதனால் சில மகளிர் குழுக்கள் கூட தங்கள் குழுக்களுக்கு சிலந்தி, ஊசித்தட்டான் என நன்மை செயும் பூச்சிகளின் பெயர்களை வைத்துள்ளனர். இயற்கை வேளாண்மையில் ஈடுபட்டிருக்கும் இன்ரைய விவசாயிகள் மூலிகை பூச்சிவீரட்டியை பயன்படுத்திகின்றனர்.
மூலிகை பூச்சிவிரட்டி என்பது எருக்கு, நொச்சி, வேம்பு, புங்கன் ,முருங்கை, ஆடதொடை ஆகியவற்றின் இலைகளை கைப்பிடி அளவு இடித்து 10லிட்டர் மாடு கோமியம் கலந்து நான்கு அல்லது ஐந்து நாட்கள் நன்கு ஊறவைத்து தயாரிப்பதாகும். மேலும் கத்திரிச்செடிகளுக்கு வேப்பங்கோட்டை கசாயம், பூண்டு கசாயம், வசம்பு கசாயம் போன்றவற்றை பூச்சிவீரட்டியாக பயன்படுத்துகின்றனர்.
கத்திரி விளைச்சலுக்கு காய்ப்புழு, அசூவினி, இழை சுருட்டு புழு போன்ற பிரச்சனைகள் வரும், இவற்றையெல்லாம் நீக்க வேம்பு எண்ணெய், புங்கன் எண்ணெய், காதி சோப்பு கரைசால் ஆகியவற்றால் தயாரான “பொன்னீம்” என்ற பூச்சிவீரட்டியை பயன்படுத்துகின்றனர். இந்த பொன்னீம் லயொலா கல்லூரியின் தயாரிப்பாகும்.
மூடாக்கு போடுதல்
இயற்கை விவசாயத்தின் முக்கியமான ஒன்று மூடாக்கு போடுதல். வைக்கோலை நெல் போன்ற பயிர்களின் மீது மூடாக்கு போடுவதன் மூலம் மண்ணில் உள்ள மண்புழுக்கள் பெருகுகின்றன, மண் அரிப்பு மற்றும் நீர் ஆவியாவததை தடுக்கின்றது. மண்ணில் ஈரப்பதம் அதிகமாகின்றது.
பயிருக்கு தேவையான சதுக்களை அதிக மடங்கு கிடைக்க செய்கின்றது, மூடாக்கி போடுவதன் மூலம் களைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. தென்னந்தோப்பில் விழும் மட்டைகள், ஓழைகள் போன்றவற்றை எரிக்காமல் அவற்றை மரத்தை சுற்றி மூடாக்கி போட்டால் களைகள் கட்டுப்படும்.
நவீன விவசாய முறையை பின்பற்றும் விவசாயிகள் கரும்பு வெட்டும் பொழுது சோகைகளை அப்படியே விட்டு விடுவார்கள். ஆனால் இயற்கை வேளாண்மை செய்யும் விவசாயிகள் அந்த சோகைகளை முடக்கு போட்டு தண்ணீர் பாய்ச்சிடுவார்கள், இதனால் மொத்த சோகைகளும் மட்கி நல்லதோர் உரமாகும். மூடாக்கி போடுவதால் மகசூல் கூடுகிறது, தண்ணீர் செலவு குறைகிறது.
ஜீவாமிர்தம்
இயற்கை வேளாண்மையில் நம் விவசாயிகள் அதிகளவு ஜீவாமிர்தம் பயன்படுத்திக்கின்றனர்.
ஜீவாமிர்தம் மண்ணீலுள்ள நுண்ணுயிரிகளை பெருக்கும் ஊடகம், இது ஊட்டச்சத்துகளை செடிகள் எடுத்துகொல்லும் வேலையைச் செய்கிறது.
இயற்கை வேளாண் வித்தகர் திரு. சுபாஷ் பாலேக்கர் ஜீவாமிர்த்ததின் நல்ல பயன்களை பற்றி விவசாயிகலுக்கு எடுத்தியம்பி அதன் மூலம் நல்லதொரு பசுமையான மாற்றத்தை ஏற்படுத்தினார்.
ஜீவாமிர்தம் எனப்படுவது நாட்டு பசுஞ்சாணம், நாட்டு பசுமூத்திரம், கருப்புநிற வெல்லம், தானிய மாவு, மண் போன்றவற்றின் கலவையால் தயாரிக்கப்படும் நுண்ணுயிர் ஊக்கியாகும்.
“ஜீவாமிர்தம் போன்ற நுண்ணுயிர் ஊக்கிகள் மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளை வேகமாக செயல்பட வைத்து, மண்ணை வளப்படுத்தி எல்லாவித சத்துகளையும் மண்ணிற்கு தருகின்றது”. இயற்கை வேளாண் வித்தகர் திரு.சுபாஷ் பாலேக்கர் ஜீவாமிர்தத்தின் நற்பயன்களைப் பற்றி விவசாயிகளுக்கு எடுத்தியம்பி அதன் மூலம்
நல்லதொரு பசுமையான மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.ஜீவாமிர்தத்தை மிகக்குறைந்த செலவில் தயாரித்து, பயிர் வளர்ச்சியில் நிறைந்த லாபத்தை நம் இயற்கை விவசாயிகள் அடைந்துள்ளனர். இயற்கை வேளாண்மையில் பஞ்சகவ்யா, அமுதக்கரைசலின் பயன்பாடும் குறிப்பிடத்தக்கதாகும். இதன் மூலம் முளைப்புத்திறன் கூடுகிறது, வளமான நாற்றுகள் உருவாகின்றன, இன்று பல விவசாயிகள் இதனை பயன்படுத்துகின்றனர்.
மேலும் இயற்கை வேளாண்மையில் யூரியாவிற்கு நல்லதொரு மாற்று பொருளாக நெய்வேலி காட்டாமணக்கு அமைந்துள்ளது.”1962ம் ஆண்டிலிருந்தே தமிழக உழவர்கள் தழைச்சத்துக்காகவும், பூச்சி விரட்டியாகவும் இதனை பயன்படுத்துகின்றனர்”.
மேலும் மண்ணை வளப்படுத்த இயற்கை வேளாண்முறையில் பல தொழில்நுட்பங்கள் உள்ளன
ஆழமாக வேர் விடும் தாவரங்களை பயிரிட்டால் அவை ஆழத்தில் உள்ள சத்துகளை உறிஞ்சுகின்றன. மேலும் அவற்றை மடக்கி உழும் பொழுது தனது தாவரப்பாகங்களை பூமிக்குத் தருகின்றன, இதனால் மண்ணின் வளம் கூடுகின்றது.
இயற்கை வேளாண்மையில் இரசாயன உரங்களுக்குப் பதிலாக நம் மக்கள் தொழுவுரம், கோழி எரு, ஆட்டுப்புழுக்கை போன்றவற்றை அடியுரமாக போடுகின்றனர். இதனால் மண் புழுக்களின் எண்ணிக்கையும் பெருகுகின்றது.வயல் வெளிகளில் ஆட்டுக்கிடை போடும் வழக்கம் நம் முன்னோர்கள் காலத்திலிருந்தே உள்ளது. கிராமப்புறங்களில் கருக்கலில் எழுந்து பெண்கள் மாட்டு சாணத்தை அள்ளிக்கொண்டு வயல் வெளிகளில் போடுவர், இவையெல்லாம் நல்ல இயற்கை உரமாகும்.
ஈரோடு மாவட்டத்தில் ஆட்டு ஓட்டம் நல்லதொரு பயிர் வளர்ச்சி ஊக்கியாக உள்ளது.
ஆட்டு ஓட்டம் என்பது வெள்ளாடு கோமியம், வெள்ளாடு எரு,பால், தயிர்,பசு நெய், இளநீர் ஆகியவற்றின் கலவையால் செய்யும் இயற்கை பொருளாகும்.
பாரம்பரிய விதைகள்
பாரம்பரிய விதைகள் உணவுக்காக மட்டும் இன்றி மருந்தாகவும் பயன்பட்டது.பாரம்பரிய விதைகளை
பயன்படுத்துவதால் இரசாயன உரம் போடத்தேவை இல்லை. பூச்சிகளை எதிர்கொள்ளும் எதிர்ப்பு சக்தி பாரம்பரிய விதைகளுக்கு உண்டு. தமிழ்நாட்டில் மட்டும் 2 இலட்சம் பாரம்பரிய நெல் ரகங்கள் இருந்துள்ளன. குழியடிச்சான் சம்பா,மாப்பிள்ளை சம்பா, குடவாலை சம்பா, கல்லுண்டை சம்பா, கவுனி அரிசி போன்றவை பாரம்பரிய நெல் ரகங்களுக்கு எடுத்துக்காட்டாகும்.
நம் முன்னோர்கள் பாரம்பரிய விதைகளை பாதுகாக்க பல யுக்திகளை கையாண்டனர்.தொடர்ந்து மூன்று அமாவாசை நாட்களுக்கு விதைகளை காய வைத்தனர் இதனால் விதைகளில் பூச்சி வராமல் இருந்தது.பஞ்சாங்கம் போன்றவை உருவாக்கி அதன் மூலம் கால நிலைகளை அறிந்து இயற்கைக்கு ஏதுவாக விதைகளை நட்டனர். பருவத்தே பயிர் செய்தனர் .இவையெல்லாம் இயற்கை வேளாண்மை தொழில் நுட்பங்கள் தான்.நம் முன்னோர்கள் பரம்பரை பரம்பரையாய் பொக்கிஷமாய் சேர்த்து வைத்த பாரம்பரிய விதைகளை நாம் இன்று தொலைத்து கொண்டிருக்கிறோம்.
கண் இருந்தும் குருடராய் அயலான் காட்டிய தவறான வழியில் சென்று தரமற்ற விதைகளை நட்டதால் நாம் நம் நிலத்தை மாசு படுத்தினோம், மண்ணில் உள்ள நன்மை செய்யும் பூச்சிகளை அழித்தோம். ஆனால் இயற்கை வேளாண்மை செய்யும் விவசாயிகள் பாரம்பரிய விதைகளின் அருமையை உணர்ந்து அதனை சேகரித்து பயிர் இடுகின்றனர். மேலும் பாரம்பரிய விதைகளை பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துகின்றனர்.இவையெல்லாம் நன்மைக்கான மாற்றங்கள் ஆகும்.
தொழில்நுட்ப கருவிகள்
இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகள் இன்று விஞ்ஞானிகள் போல திகழ்கின்றனர், விவசாயத்தை எளிமைப்படுத்த பலவித கருவிகளை தாயாரிக்கின்றனர்.
கரும்புதோகைகளை மூடாக்கு போடும் வகையில் பொடி பொடியாக வெட்டி தரும் இயந்திரம் ஸ்ரீநாட் . இதன் மூலம் மூடாக்கு போடும் வேலை எளிமையாகிறது.
செடியில் இருந்து கடலையை பிரிதெடுக்கம் கருவியை புதுச்சேரியை சேர்ந்த H.M.அந்தோணி என்பவர் கண்டுபிடித்திருக்கிறார்.
மதுரையை சேர்ந்த சுந்தர் ராஜ் என்பவர் சிறிய பரப்பளவு கொண்ட வயல்களில் கரும்புகளை வெட்ட கரும்பு வெட்டும் கருவியை கண்டுபிடித்திருக்கிறார்.
செல்போன் மூலம் பம்பு செட்டை இயக்கும் மென்பொருளை கோயம்புத்தூரைய் சேர்ந்த பொறியியல் பட்டதாரி அருண் கண்டுபிடித்திருக்கிறார்.
இதனால் விவசாயிகள் மிகவும் பயன்பெறுகின்றனர்.
இப்படி புதுப்புது தொழில்நுட்ப கருவிகளை இயற்கை விவசாயத்தில் உபயோகப்படுத்தி பயன் பெறுவோம்.
முடிவுரை
“பஞ்சமோ பஞ்சம் என்றே – நிதம்
பரித்தவித்தே உயிர் துடிதுடித்துத்
துஞ்சி மடிகின்றாரே – இவர்
துயர்களைத் தீர்ககவோர் வழியில்லையே”
என்று வேதனையுற்றான் பாரதி. மக்களின் வேதனையை, அவர்களுக்கு வந்த சோதனையை நீக்க ஒரே வழி செலவு குறைந்த, வரவு நிறைந்த இயற்கை விவசாயத்தொழில்நுட்பமேயாகும்.
பசுமை புரட்சியின் தந்தை டாக்‌டர் எம்.எஸ் சுவாமிநாதன் கூட ‘நிலைத்த நீடித்த இயற்கையோடு இணைந்த விவசாயம் தான் இனி சரிப்பட்டு வரும்’ என்று வலியுறுத்தத் தொடங்கிவிட்டார்.இயற்கை விவசாயத்தின் மகிமை பற்றி மக்களிடம் விளக்க இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார், வேளாண் வித்தகர் சுபாஷ் பாலேக்கர், பசுமை விகடன் இதழ் போன்றோர் பெரும் முயற்சி மேற்கொள்கின்றனர்.
அவர்களின் வழிகாட்டுதல் மூலமாக இன்று நாம் நாட்டில் பல விவசாயிகள் இயற்கை வேளாண்மைக்கு மாறிக்கொண்டிருக்கின்றனர், மறுமலர்ச்சியை உருவாக்கி வருகின்றனர்.சுற்றுச்சூழல் மாசுப்பட்டதின் விளைவாக இன்று தாய்ப்பாலில் கூட விஷம் என்ற நிலைமை உருவாகி விட்டது, இனியும் நாம் தாமதித்தோமென்றால் தரணி தரை மட்டமாக்கி விடும். இயற்கை வேளாண்மை வெற்றி அடையுமா என்ற கேள்விக்கு விடையாக “world watch Institute” 2006ம் ஆண்டில் வெளியிட்ட ஆய்வுகளே ஆதாரமாகும். அதில் உலக உழவர்கள் அனைவரும் இன்றே இயற்கை விவசாயத்திற்கு மாறினால் வளர்ந்த நாடுகளில் விளைச்சல் இப்போது இருப்பதை காட்டிலும் 80% இருக்கும். வளரும் நாடுகளில் 2 முதல் 4 மடங்கும் இருக்கும்” என்று கூறுகிறது. உலகில் வளரும் நாடுகளில் தான் மக்கள் தொகை அதிகம் , எனவே அந்நாடுகளில் வேளாண்மை வெற்றியடைந்தால் உலகம் வெற்றியடையும். எனவே இயற்கை வளம் பேணும், மண் வளம் காக்கும், தரமான சத்துக்கள் கொண்ட காய்கறிகளை விளைவித்துத் தரும் இயற்கை வழி விவசாயத்தை இனிதே வரவேற்போம்.
இயற்கை விவசாயம் பண்ணுவோம் – இன்று
இன்னல்களால் இம்சைபடும் நாம் – இனிமேல்
இன்பத்தை மட்டுமே அனுபவிப்போம்
இயற்கையின் போக்கில் செல்வோம்
இனிதே வாழ்வோம்!
நன்றி: மணற்கேணி

Monday, October 26, 2015

ஏக்கருக்கு ஒரு லட்சம்… பந்தல் காய்கறி… பக்காவான வருமானம்…

ஏக்கருக்கு ஒரு லட்சம்… பந்தல் காய்கறி… பக்காவான வருமானம்…



குதூகலமூட்டும் குறும்புடலை!

‘வேலையாட்கள் குறைவாகத்தான் தேவைப்பட வேண்டும்; அதிக வேலை வைக்கக் கூடாது; நல்ல வருமானமும் கிடைக்க வேண்டும்…’

-நீங்கள், இப்படியெல்லாம் கணக்குப் போட்டு விவசாயம் செய்பவராக இருந்தால், உங்களுக்கான விவசாயம்… பந்தல் காய்கறிகளாகத்தான் இருக்க முடியும். ஆம், இந்த சூட்சமத்தைத் தெரிந்து வைத்திருக்கும் விவசாயிகள் பலரும், தொடர்ந்து பந்தல் வகை காய்கறிகளைத்தான் சாகுபடி செய்து வருகிறார்கள்… திருவண்ணாமலை, வேங்கிக்கால், சுரேஷ்குமார்! இவர், குறும்புடலை சாகுபடியில், குதூகல வருமானம் பார்த்துக் கொண்டிருப்பவர்!

திருவண்ணாமலை-அவலூர்பேட்டை சாலையில், பதினெட்டாவது கிலோ மீட்டரில் வருகிறது, மங்கலம். இங்கிருந்து இடதுபுறமாக செல்லும் சாலையில், ஏழாவது கிலோ மீட்டரில் ஆர்ப்பாக்கம். இங்கேதான் இருக்கிறது… சுரேஷ்குமாரின் தோட்டம்! நெல், கரும்பு, நிலக்கடலை… என பல வகைப் பயிர்களோடு, குறும்புடலையும் நம் கவனத்தை ஈர்க்கிறது.

புடலை அறுவடையில் ஈடுபட்டிருந்த சுரேஷ்குமார், ”பிறந்து, வளர்ந்தது எல்லாமே திருவண்ணாமலையிலதான். டிப்ளமோ இன்ஜினீயரிங் படிச்சேன். வேலை கிடைக்காததால, ஃபிரண்ட்ஸோட சேர்ந்து, அரிசி வியாபாரம் செஞ்சேன். மூட்டை கணக்குல நெல் வாங்கி, அரைச்சு விப்போம். ஆரம்பத்துல நல்ல லாபம் கிடைச்சுது. ஆனா, ஒரு கட்டத்துல பணத்தை வசூல் பண்றதுல தொய்வு வந்துடுச்சு. பல பேர் திருப்பிக் கொடுக்காம போனதால, பெரிய நஷ்டம். அதனால… அப்பா வாங்கிப் போட்டிருந்த நிலத்துல விவசாயத்தைப் பாக்கறதுக்கு வந்தேன்.

எங்க பாட்டி மூலமா, சின்ன வயசுல இருந்தே எனக்கு விவசாயம் அறிமுகம்தான். அந்த தைரியத்துல முதல் போகத்துலேயே கரும்பு போட்டேன். ஏக்கருக்கு 40 டன் மகசூல் கிடைச்சுது. செலவு போக ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாயைத்தான் லாபமா பாக்க முடிஞ்சுது. ‘இந்த லாபத்துக்கு விவசாயம் பண்ணினா… கட்டுப்படியாகாது’னு யோசிக்க ஆரம்பிச்சுட்டேன்.

ஆட்கள் தேவையைக் குறைத்த பந்தல்!

‘நல்ல லாபம் கிடைக்கறதுக்கு எதைப் பயிரிடலாம்’ங்கற தேடல்லயே இருந்தேன். அப்ப ஒரு நாள், நண்பர் மூலமா ‘பசுமை விகடன்’ அறிமுகமாச்சு. தொடர்ச்சியா படிக்க ஆரம்பிச்சதுல… ‘காய்கறி சாகுபடி செஞ்சா நல்ல வருமானம் வரும்’னு தெரிஞ்சுக்கிட்டு… 40 சென்ட்ல சுரைக்காய் போட்டேன். செலவுபோக 40 ஆயிரம் கிடைச்சுது. பிறகு… 3 ஏக்கர்ல வெண்டை, கத்திரி, மிளகாய்னு சாகுபடியில இறங்கினேன். நல்ல வருமானம். ஆனா… வேலையாட்கள் அதிகமா தேவைப்பட்டாங்க. சிலர்கிட்ட யோசனை கேட்டப்போதான், பந்தல் காய்கறியை முயற்சி பண்ணச் சொன்னாங்க. பாகல், பீர்க்கன், புடலை மூணையும் தனித்தனியா சாகுபடி செஞ்சேன். ஒரு ஏக்கர்ல 15 டன் பாகல், 18 டன் பீர்க்கன், 23 டன் புடலைங்கற கணக்குல மகசூல் கிடைச்சுது. மூணுலயும் புடலை சாகுபடிதான் வசதியா இருந்துச்சு. அதனால, குறும்புடலையை மட்டும் சாகுபடி செய்ய ஆரம்பிச்சுட்டேன்” என்று முன்னுரை கொடுத்த சுரேஷ்குமார்,

இயற்கைக்கு மாற்றிய பசுமை விகடன்!

”மொத்தம் 12 ஏக்கர் நிலமிருக்கு. அதுல 9 ஏக்கர்ல நெல், 3 ஏக்கர்ல குறும்புடலை இருக்கு. ஆரம்பத்துல முழுக்க முழுக்க ரசாயன உரங்களையும், பூச்சிக்கொல்லிகளையும்தான் பயன்படுத்தினேன். ‘பசுமை விகடன்’, ‘கேத்தனூர்’ பழனிச்சாமி’ ரெண்டு பேரும் தந்த தைரியத்துல… இயற்கை விவசாயத்துல கால் வெச்சேன். கோழி எரு, மாட்டு எரு, சூடோமோனஸ், பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம்னு கொஞ்சம் கொஞ்சமா இயற்கை இடுபொருட்களைப் பயன்படுத்துறேன். இன்னும் கொஞ்ச நாள்ல முழுமையா இயற்கை விவசாயத்துக்கு மாறிடுவேன்” என்று சந்தோஷ குரலில் சொன்னார்!

10 மாத வயது!

அவர் சொன்ன சாகுபடி முறைகளைப் பாடமாகத் தொகுத்திருக்கிறோம்.

”குறும்புடலையின் சாகுபடி காலம் 10 மாதங்கள். இதற்கு ஆடிப்பட்டம் ஏற்றது. செம்மண் கலந்த, மணற்பாங்கான பூமியில் நன்கு விளையும். ஒரு ஏக்கர் சாகுபடி நிலத்தில் ஒரு டிப்பர் மாட்டு எரு, தலா அரை டிப்பர் ஆட்டு எரு மற்றும் கோழி எரு ஆகியவற்றைக் கலந்து கொட்டி கலைத்து… மண் பொலபொலப்பாக மாறும் அளவுக்கு மூன்று சால் உழவு செய்ய வேண்டும். பிறகு, 12 அடி நீளம் கொண்ட மூங்கிலை, எட்டு அடி இடைவெளியில், ஒன்றரையடி ஆழத்தில் நட்டு, தரையில் இருந்து ஐந்தடி உயரத்தில் ‘ஸ்டே’ கம்பியில் இழுத்து கட்டிக் கொள்ள வேண்டும். இந்தக் கம்பிகளுக்கிடையில் அரையடி இடைவெளியில், தடிமனான ‘நைலான் ஒயர்’களால் பின்னி, பந்தல் தயார் செய்ய வேண்டும். இந்த முறையில் பந்தல் அமைக்க, ஏக்கருக்கு 800 மூங்கில், 120 கிலோ ஸ்டே கம்பி, 35 கிலோ நைலான் ஒயர் தேவைபடும். பந்தலை ஐந்தாண்டுகள் வரை பயன்படுத்தலாம்.

ஏக்கருக்கு 600 கிராம் விதை!

வரிசைக்கு வரிசை 16 அடி இடைவெளியும் (ஒரு மூங்கில் தூண் விட்டு, ஒரு மூங்கில் தூண் அருகில்), செடிக்கு செடி இரண்டு அடி இடைவெளியும் கொடுத்துச் சொட்டு நீர்க் குழாய்களை அமைத்துக் கொள்ள வேண்டும். அரை மணி நேரத்துக்கு பாசனம் செய்து நிலத்தை ஈரமாக்கி, 2 அடி இடைவெளியில் குத்துக்கு ஒரு புடலை விதை வீதம் நடவு செய்ய வேண்டும். ஒரு ஏக்கர் நிலத்தில், ஆயிரத்து 200 விதைகளை நடவு செய்யலாம் (ஏக்கருக்கு 600 கிராம் விதை தேவைப்படும்). நடவு செய்யும்போதே தனியாக நாற்று உற்பத்தித் தட்டில் 100 நாற்றுகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

இடை உழவுக்கு மினி டிராக்டர்!

நடவு செய்த 5 முதல் 7 நாட்களில் முளைப்பு எடுத்துவிடும். சரியாக முளைக்காத இடங்களில், தனியாக உற்பத்தி செய்திருக்கும் நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். 6 கிலோ கடலைப் பிண்ணாக்கை, 60 லிட்டர் தண்ணீரில் ஓர் இரவு முழுவதும் ஊற வைத்து, 15-ம் நாளில் செடிக்கு 50 மில்லி வீதம் ஊற்ற வேண்டும். 20-ம் நாள் முதல் மாதம் ஒரு முறை வீதம், மூன்று மாதங்களுக்கு… செடிகளைச் சுற்றிலும் கைகள் மூலமாகவும், இடைவெளிப் பகுதிகளில் மினி டிராக்டர் மூலமாகவும் களைகளை அகற்ற வேண்டும். அதற்கு மேல், கொடியானது பந்தலில் அடர்ந்து மூடிக்கொள்வதால், களை எடுக்க வேண்டியிருக்காது.

ஊட்டம் கொடுக்கும் கோழி எரு!

மண்ணின் தன்மையைப் பொருத்துப் பாசனம் செய்தால் போதுமானது. 20-ம் நாள் முதல் 15 நாட்களுக்கு ஒரு தடவை பஞ்சகவ்யா (ஏக்கருக்கு 3 லிட்டர்) அல்லது ஜீவாமிர்த கரைசல் (ஏக்கருக்கு 10 லிட்டர்) என மாற்றி மாற்றி சொட்டு நீரில் கலந்துவிட வேண்டும். 30, 60 மற்றும் 90-ம் நாளில் 19:19:19 நீரில் கரையும் உரத்தை, டேங்குக்கு 100 கிராம் வீதம் கலந்து இலை வழி உரமாகத் தெளிக்க வேண்டும். ஏக்கருக்கு 8 டேங்குகள் தேவைப்படும். 35-ம் நாளில் இருந்து 15 நாட்களுக்கு ஒரு முறை செடிக்கு ஒரு கிலோ வீதம் கோழி எருவை வேர் பகுதியில் வைக்க வேண்டும். 40-ம் நாளில் தலா 50 கிலோ வீதம் புங்கன் பிண்ணாக்கு, ஆமணக்குப் பிண்ணாக்கு, வேப்பம் பிண்ணாக்கு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து… ஒவ்வொரு செடிக்கும் 100 கிராம் வைக்க வேண்டும். பூச்சி, நோய் தாக்குதல் இருந்தால், இயற்கைப் பூச்சிக் கொல்லிகளைத் தெளிக்கலாம்.

20-ம் நாளில் இருந்து செடிகளில் பக்கக் கிளைகள் வரும். அதில் நேராக செல்லும் கொடியை மட்டும் ‘ஒற்றைப்பிரி’ சணலால் கட்டி பந்தலில் ஏற்றிவிட வேண்டும். மற்றக் கிளைகளை அகற்றிவிட வேண்டும். 45-ம் நாளில் பூ வைத்து, 50 முதல் 60-ம் நாளில் பிஞ்சாக மாறி, 70-ம் நாளிலிருந்து அறுவடைக்குத் தயாராகி விடும்.’

ஒரு ஏக்கரில் 34,500 கிலோ!

நிறைவாக பேசிய சுரேஷ்குமார், ”இங்க விளையுற புடலையை சென்னையில இருக்கற கோயம்பேடு மார்க்கெட்டுலதான் விற்பனை செய்றேன். ஒரு நாள் விட்டு ஒரு நாள்னு அறுவடை செய்யலாம். மொத்தம் 115 அறுவடை வரும். ஒரு ஏக்கர் நிலத்துல அறுவடைக்கு 250 கிலோவில் இருந்து 350 கிலோ அளவுக்கு புடலங்காய் கிடைக்குது. சராசரியா, 300 கிலோனு கணக்குப் போட் டாலே… 34,500 கிலோ மகசூல் கிடைச்சுடும். கிலோ சராசரியா 8 ரூபாய்னு விற்பனை யாகுது. இதன்படி கணக்குப் போட்டா… ரெண்டு லட்சத்து, 76 ஆயிரம் ரூபாய் வருமானம். பந்தல் செலவு, மத்த செலவுகள்னு எல்லா செலவுகளும் போக ஒரு லட்சம் ரூபாய் லாபம். பந்தல் செலவு முதல் வருஷம் மட்டும்தான். அடுத்த நாலு வருஷத்துக்கு… அந்த 68 ஆயிரமும் லாபத்துல சேர்ந்துடும்” என்று வெற்றிக் களிப்புடன் சொன்னார்!

தொடர்புக்கு,
சுரேஷ்குமார்,
செல்போன்: 99447-42928.

www.facebook.com/வாங்க-விற்க-563035333829934