Tuesday, September 22, 2015

குளிர் காலங்களில் சளி பிடித்தால்?

பொதுவாக சிலருக்கு குளிர் காலங்களில் சளி பிடித்து எந்த மருந்துக்களை உபயோகித்தாலும் குணமாகாது.


*
மூன்று எலுமிச்சை பழத்தை எடுத்து, அதை பாதியாக வெட்டி, ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் இரண்டு கப் அளவு தண்ணீர் ஊற்றி, அதனில் தேவையான அளவு உப்பு இட்டு, நன்கு கொதிக்க வையுங்கள்.
*
கொதிக்க வைத்த இரண்டு கப் நீர், ஒரு கப் அளவு குறையும் வரை கொதிக்க விடுங்கள். பிறகு அந்த எலுமிச்சை பழத்தையும் பிழிந்து அந்த நீரை ஒரு கப்பில் எடுத்து சிறிதளவு சீனி சேர்த்துக் கொள்ளுங்கள்.
*
ஓரளவு சூட்டுடன் இரவு தூங்க செல்லும் அரை மணி நேரத்துக்கு முன்பு குடித்து விட்டு தூங்குங்கள்.
*
நீங்கள் உறங்கிய பிறகு, உங்களுக்கு வியர்வையாக வியர்த்து உங்கள் உடம்பில் உள்ள சளி வெளியேறி விடும்.
*
பிறகு மருத்துவர்களிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.
*
பிறரும் பயன் பெற.... இந்த பதிவை படித்து விட்டு பகிர்ந்து கொள்ளுங்கள்.

Monday, September 21, 2015

பாகற்காய் - எப்படி பயன் படுத்தினால் சிறப்பான மருந்தாக மாற்ற முடியும்..?


நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து ஆரோக்கியத்துடன் வாழ இயற்கை அளித்த அருமருந்தான பாகற்காயின் மருத்துவ குணங்களும் பயன்படுத்தும் முறையும் பார்க்கலாம்.
பாகற்காயின் இலையை சிறிது சாறு எடுத்து ஓர் அவுன்சில் சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை, மாலை இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ காய்ச்சல் நின்று விடும்.
பாகற்காயின் இலையை அரைத்து உடம்பெல்லாம் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிக்க வேண்டும்.
இவ்வண்ணம் மூன்று நாட்கள் செய்து வந்தால் போதும் நாய்க்கடியின் விஷம் உடம்பில் ஏறாது. பாகற்காயின் இலைச் சாற்றில் காசிக் கட்டியை (கத்தைக் காம்பு) உரைத்து சிரங்கின் மேல் தடிப்பாகத் தடவி வந்தால் ரத்தம் சுத்தமாகி சிரங்கு உதிர்ந்து விடும்.
ஒரு பிடி கொடுப்பாகற்காயின் இலையுடன் ஐந்தாறு மிளகைச் சேர்த்து காரமற்ற அம்மியில் அரைத்து கண்களைச் சுற்றிப் பற்றுப் போட்டு வந்தால் மாலைக்கண் நோய் குணமாகும்.
பாகற்காயின் இலைச் சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுத்தால் அத்துடன் பாம்பு கடித்த விஷம் நீங்கும். அதே இலைச் சாற்றை ஓர் அவுன்ஸ் எடுத்து அதில் அரை அவுன்ஸ் நல்லெண்ணெயைக் கலந்து உட்கொண்டால் உடனே காலரா நீங்கும்.
நீரழிவுக்குக் குணம் தெரியும் வரை தொடர்ந்து ஓர் அவுன்ஸ் பாகற்காயின் இலைச் சாற்றில் உளுந்தளவு பெருங்காயப் பொடியைக் கலந்து சாப்பிட்டு வர வேண்டும்.
சர்க்கரை வியாதிக்கு மிகச் சிறந்த மருந்தாகும். ஓர் அவுன்ஸ் பாகற்காயின் இலைச் சாற்றுடன் சமபங்கு ஆட்டுப்பால் அல்லது பசுவின் மோர் கலந்து மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் காசநோயை கட்டுப்படுத்தலாம்.
நம் உடலில் உள்ள பல புழுக்களினால் தான் நமக்கு நோய் வருகிறது. சரியான உணவு உண்ணும் பட்சத்தில் புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கும்.
உடலில் உள்ள புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு அதிகரிக்க இயற்கை அளித்த அருமையான காய் தான் பாகற்காய்.
1. பாகல் இலையின் சாறு ஓர் அவுன்சில் சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை, மாலை இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ சுரம் நின்று விடும்.
2. பாகல் இலையை அரைத்து உடம்பெல்லாம் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிக்க வேண்டும். இவ்வண்ணம் மூன்று நாட்கள் செய்து வந்தால் போதும் நாய்க்கடியின் விஷம் உடம்பில் ஏறாது.
3. பாகல் இலைச் சாற்றில் காசிக் கட்டியை உரைத்து சிரங்கின் மேல் தடிப்பாகத் தடவி வந்தால் ரத்தம் சுத்தம் செய்யப் பெற்றுச் சிரங்கு உதிர்ந்து விடும்.
4. பாகல்வேரை சந்தனம் போல் அரைத்து நல்லெண்ணெயில் குழைத்து ஜனனேந்திரியத்தின் உள்ளும், புறமும் தடவி வந்தால் பெண்களுக்குக் கருப்பை நோய் தீரும். பிரசவத்துக்கு பின் வரும் மண்குத்தி நோய்க்கு இது கைகண்ட மருந்தாகும்.
5. ஒரு பிடி கொடுப்பாகல் இலையுடன் ஐந்தாறு மிளகைச் சேர்த்து காரமற்ற அம்மியில் அரைத்து கண்களைச் சுற்றிப் பற்றுப் போட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும்.
6. பாகல் இலைச் சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுத்தால் அத்துடன் பாம்பு (கண்ணாடி விரியன்) கடித்த விஷம் நீங்கும்.
7. பாகல் இலைச் சாற்றை ஓர் அவுன்ஸ் எடுத்து அதில் அரை அவுன்ஸ் நல்லெண்ணெயைக் கலந்து உட்கொண்டால் உடனே காலரா நீங்கும்.
8. நீரழிவுக்குக் குணம் தெரியும் வரை ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றில் உளுந்தளவு பெருங்காயப் பொடியைக் கலந்து சாப்பிட்டு வர வேண்டும்.
9. ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றுடன் சமபாகம் ஆட்டுப்பால் அல்லது பசுவின் மோர் கலந்து மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் காசநோயை மட்டுப்படுத்தும்.
10. பொதுவாக மேற்கிந்திய தீவுகளில் சிறுநீரகக் கற்களுக்கும், ஜுரத்துக்கும், குடல் புண், வாயுத் தொல்லைகளுக்கும் இது மருந்தாகிறது. பாகற்காயின் இலையைக் கொதிக்க வைத்து சாறு எடுத்து கல்லீரல் உபாதைக்கு பயன்படுத்துகிறார்கள்.
11. இலையைக் கொதிக்க வைத்து, சாறு எடுத்து கல்லீரல் உபாதைக்கு பயன்படுத்துகிறார்கள்.
12. சர்க்கரை வியாதிக்கு மருந்தாக முற்றிய பாகற்காய் பயன்படுகிறது.
13. பழம் டானிக்காகவும், மாதவிடாய் ஒழுங்கின்மையை சரிப்படுத்தவும் உதவுகிறது.
14. உடலில் கட்டி, புண்கள் இருந்தால் ஒரு கப் பாகற்காய் சூப் எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட மூன்று மாதங்களுக்குள் ரத்தம் சுத்தமாகி தோல் பளபளப்பாகி விடுமாம்

Thursday, September 10, 2015

இயர்க்கைப் பூச்சி விரட்டி

இயற்கை வழி சாகுபடி முறை பூச்சிகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.

பச்சைப் புரட்சியின் சாதனையாக ரசாயன நஞ்சுகளைப் பயன்படுத்தி பூச்சிகளைக் கொல்ல தொடங்கியதும் உணவு நஞ்சானது மட்டுமின்றி, பூச்சிகளும் சாகத் தயாராக இல்லை.
மூலிகை பூச்சி விரட்டி வேலை செய்யும் விதம் எப்படி?
மூலிகை பூச்சி விரட்டிகள் மூன்று வகையான இலைகளைக் கொண்டு தயாரிக்கப்டுகிறது. ஒன்று, தொட்டால் வாசனையடிக்கக் கூடிய செடிகள், இரண்டு தின்றால் கசக்கக் கூடிய செடிகள், ஒடித்தால் பால் வரக்கூடிய செடிகள்
எடுத்துக்காட்டாக
ஆடாதொடை, ஆடுதீண்டாபாளை, ஊமத்தை, எருக்கு, தும்பை, துளசி, அத்தி, சோற்றுக் கற்றாழை, பெரண்டை, பீநாரி, பப்பாளி, சீதா, புங்கன், நொச்சி, வேம்பு, தழுதாளை, காட்டாமணக்கு, வேலிப்பருத்தி, வரிக்குமுட்டி, உண்ணிமுள் செடி, நித்தியகல்யாணி, உரக்கொளறை (கிளைரிசிடியா). இவற்றில் அடையாளம் தெரியாதவை இருந்தால் கவலைப்பட தேவையில்லை. தேவை நான்கு ஐந்து செடிகள் மட்டுமே. அவசியம் நெய்வேலி காட்டாமணக்கு செடி பயன்படுத்த வேண்டும்.
ஒரு சாக்கு இலைகளை கொண்டு வந்து உரலில் இடித்து மண் தொட்டி அல்லது சிமெண்ட் தொட்டியையும் பயன்படுத்தலாம். பானைக்குள் இருக்கும் மூலிகை சட்னி மூழ்கும் அளவுக்கு ஆடு அல்லது மாட்டுச் சிறுநீரை ஊற்றி நிரப்பவும்.
மேலே குறிப்பிட்ட கலவை பத்து நாட்களில் மூலிகைக் கரைசலில் இருந்து தாங்க முடியாத அளவுக்கு நெடி வரக்கூடும். பூச்சி விரட்டி தயாராகி விட்டதற்கு இதுவே அடையாளம். ஒரு லிட்டர் பூச்சி விரட்டியுடன் பத்து லிட்டர் தண்ணீர் கலந்து பயிர் மீது தெளிக்க வேண்டும்.
மூலிகை பூச்சி விரட்டி செயல்படும் விதம்.
பூச்சி விரட்டி பயிர்களின் வாசனையை மாற்றி விடுகிறது. இதனால் தாய்ப்பூச்சி பயிரின் மீது அமர்ந்து முட்டையிடுவது தவிர்க்கப்படுகிறது.
எல்லா பூச்சிகளும் பயிர்களின் விரோதிகள் அல்ல. பூச்சிகளை உண்ணும் தட்டான், பொறிவண்டு, மூக்கு வண்டு, சிலந்தி, கண்ணாடி சிறகி போன்றவை இருக்கவே செய்கின்றன. இத்தகைய நல்ல பூச்சி நண்பர்களை அடையாளம் கண்டு வைத்திருப்பது மிகவும் அவசியம்.
பூச்சிகளை பார்த்தவுடன் நஞ்சு தெளிப்பது கூடாது.
நூறுக்கும் மேற்பட்ட பறவைகள் பயிர் செடிகளை உண்ணும் பூச்சிகளை பிடித்து உண்ணுகின்றன.
குச்சிகள் அல்லது தென்னை ஓலையின் அடிமட்டையைப் பயிர் நடுவே நட்டு வைத்தால் பறவைகள் அதில் வந்து அமர்ந்து பூச்சியை பிடித்து உண்ணும். சென்டிப் பூ போன்ற செடிகளை பயிர்களின் ஊடே நடவு செய்வதன் மூலம் தீய பூச்சியை விரட்டலாம். ஆமணக்கு, வெள்ளரி, தட்டை பயிறு போன்ற செடிகளை நிலத்தின் விளிம்பின் நான்கு திசையிலும் பயிர் செய்ய வேண்டும். இது பூச்சிகளைக் கவர்ந்து இழுத்து முக்கிய பயிர்களை காக்கிறது.
பூச்சிவிரட்டியை நமக்கு கிடைக்கும் பொருளை கொண்டு தயாரித்து கொள்ளலாம்
செலவில்லாமல்

ஒரு காலத்துல 56 லட்சம் ரூபாய் கடன்காரனா இருந்த நான் இன்னிக்கு லட்சாதிபதியா இருக்கேன்.

ஒரு காலத்தில் 56 லட்சம் ரூபாய் கடனாளியாக இருந்த நெல்லை மாவட்டம் புளியங்குடி விவசாயி அந்தோணிச்சாமி, இன்று லட்சாதிபதி.. 


''1957-ம் வருஷம்தான் நான் விவசாயத்துல இறங்கினேன். அப்ப ரசாயன உரமெல்லாம் அதிகம் கிடையாது. 5 கிலோ அமோனியம் சல்பேட் வாங்கச்சொல்லி எங்க ஊரு கிராம அதிகாரி விளம்பரப்படுத்தினாங்க.. நானும் ரசாயன உரத்தை வாங்கிட்டு வந்து வயல்ல போட்டேன். பயிர் சும்மா 'குபீர்'னு வளர்ந்துச்சி. கரும்பச்சை நிறத்துல பயிரைப் பார்க்கவே பரவசமா இருந்துது. அதுக்குப்பிறகு ரசாயன உரத்து மேல பெரிய மோகம் வந்துபோச்சி.

இவ்வளவு உரம் போட்டதுக்கு கிடைச்ச மகசூல், கொஞ்சம் கூட கட்டுப்படியான விஷயமா இல்லை. இதுக்குக் காரணம் மண்ணோட தன்மை மாறிப்போனதுதான். எவ்வளவு ரசாயன உரத்தைக் கொட்டியும் விளைச்சல் பெருகல. மண்ணுல ‘சிங்’ நுண்ணூட்டப் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கும்'னு அதிகாரிங்க சொன்னாங்க. சரினு 'சிங்'கும் போட்டேன். அப்புறம், 'அயன் (இரும்புச் சத்து) போடுங்க'னு சொன்னாங்க. அதையும் போட்டேன். போரான், மாங்கனீசுனு வரிசையா விவசாய அதிகாரிங்க சொன்னதையெல்லாம் போட்டேன். போகப்போக இடுபொருள் செலவு அதிகரிச்சி, கடனும் கூடிக்கிட்டே போச்சி. ஆனா, விளைச்சல் மட்டும் கூடவே இல்ல.

87-ம் வருஷத்துல விவசாயமே செய்யமுடியாத அளவுக்கு நிலைமை முத்திப்போச்சி. ஏக்கருக்கு ஒன்றரை டன் கூட நெல் விளைச்சல் கிடைக்கல. இதுக்கு என்னதான் வழி.. கடன்ல இருந்து எப்படி தப்பிக்கிறதுனு ரொம்ப யோசிச்சிக்கிட்டே இருந்தேன். ஒருத்தர் கோயம்புத்தூர் வேளாண் பல்கலைக்கழகத்துக்கு கூட்டிக்கிட்டுப் போனார். 'விவசாயம் நஷ்டமாகிப் போச்சி. கொட்டில் முறையில் ஆடு வளர்க்கலாமா?'னு அங்க கேட்டோம். 'நாங்களே அதுல ஜெயிக்க முடியல. ஆடு வளர்க்கறதையே நிறுத்திட்டோம்'னு சொல்லிட்டாங்க.

எப்படியாவது கடனை அடைக்கணுமேனு வெறியோட அலைஞ்சி வெளிநாட்டு ஆடுகளை வாங்கிட்டு வந்து வளர்த்தேன். அதோட கழிவுல இருந்து 11% நைட்ரஜன் சத்து கிடைச்சுது. அதை வயல்ல போட்டேன். ரொம்ப வருஷத்துக்குப் பிறகு என்னோட மண்ணுல ஒரு பூரிப்பு உண்டாச்சி. 'அடடா இயற்கை உரம் என்ன அற்புதமா வேலை செய்யுது?'னு எனக்குள்ள ஒரு சந்தோஷம். அதேசமயம், அந்த ஆடுங்க அத்தனையும் துடிதுடிச்சி இறந்து போச்சி. நான் ஒரு பேராசை புடிச்சவன். குளிர் பிரதேசத்துல வளர்ற ஆட்டைக் கொண்டு வந்து, வெக்கைப் பிடிச்ச இந்த மண்ணுல வளர்க்க நினைச்சது என்னோட தப்புதானே..

மனசும், உடம்பும் சோர்ந்து போயி உடம்பு ரொம்ப பலவீனமாயிடுச்சி. இந்தக் கவலையிலயே கழுத்து எலும்பு தேஞ்சி நிமிந்து கூட பார்க்க முடியாத நிலை. 'என்னடா நம்ம பொழப்பு இப்படி போயிடுச்சே'னு யோசனை செஞ்சப்ப, ஆரோக்கியமான உணவு இருந்தா எதையும் சாதிக்கலாம்னு தோணுச்சி. அதுக்கு இயற்கை விவசாயம்தான் சரிப்பட்டு வரும்னு 90-ம் வருஷம் ஒரு ஏக்கர்ல ரசாயன உரம், பூச்சி மருந்து எதையும் பயன்படுத்தாம, இயற்கை உரத்தை மட்டுமே போட்டு 15 மூட்டை நெல்லை விளைவிச்சேன். அதைச் சாப்பிட, சாப்பிட உடம்பு கொஞ்சம் கொஞ்சமா தேறிச்சி. ஆனா, நான் வாங்கின கடன்.. வட்டி குட்டி போட்டு 56 லட்ச ரூபாய் கடன்காரனா ஆயிட்டேன்..

அதைக் கட்ட முடியாம, கோர்ட்ல கைகட்டி நின்னேன். 'நீதிபதி அய்யா, என்கிட்ட பணம் கிடையாது. இப்பக்கூட கடன் வாங்கிகிட்டுதான் மெட்ராஸ் வந்து சேர்ந்திருக்கேன். எப்படியாவது தயவு பண்ணுங்க'னு கையெடுத்துக் கதறி அழுதேன்.. அந்த நீதிபதி நல்ல மனுஷன். 'இரண்டு ஆண்டுகள் அவகாசம் தருகிறேன்'னு சொன்னார். ஊர் திரும்பினதும் ராப்பகலா பாடுபட்டோம். மண்ணை மாத்தினா எல்லாமே மாறும்னு நிலத்துல மாட்டுச் சாணத்தையும், கோமியத்தையும் போட ஆரம்பிச்சேன். கொஞ்சம் கொஞ்சமா நிலம் வளமாச்சி.

கடனை அடைக்க எனக்காகவே ஒரு பயிரு காட்டுல காத்துகிட்டு இருந்துச்சி. அதுதான் எலுமிச்சை. எங்க பகுதியில எலுமிச்சை ரொம்ப பிரபலம். காட்டுல உள்ள ஒரு வகை எலுமிச்சை செடியை எடுத்துகிட்டு வந்து, நாட்டுச் செடியோட ஒட்டுக்கட்டினேன். அமோக விளைச்சல். கொஞ்சம் கொஞ்சமா கடனையெல்லாம் அடைச்சிட்டேன். வறட்சியைத் தாங்கி வளர்ந்த இந்த ரகத்துக்காக அப்போதைய குடியரசு தலைவர் அப்துல் கலாம் கூட விருது கொடுத்து பாராட்டினர்..

நடவு செஞ்சப்ப உழவு ஓட்டினதோட சரி. களை எடுக்கவும் இல்ல. மருந்து அடிக்கவும் இல்ல. உரம் போட வேண்டிய வேலையும் இல்லாம போயிடுச்சி. வருஷம் முழுக்க எலுமிச்சை காய்ச்சி தொங்குது. ஒவ்வொரு மரத்துலயும் மூவாயிரம் காய் காய்ச்சிக்கிட்டிருக்கு. ஏக்கருக்கு நூறு மரம் நடவு செய்திருக்கேன். தமிழ்நாட்டோட சராசரி கரும்பு விளைச்சல் ஏக்கருக்கு 30 டன்தான். நான் ஏக்கருக்கு 60 டன் எடுக்கிறேன்..

2003-ம் வருஷம் மண் பரிசோதனை செஞ்சி பார்த்ததுல, 1957-ம் வருஷத்துக்கு முன்ன இருந்த மாதிரி நிலம் வளமிக்கதா மாறிடுச்சி. நான் இயற்கை விவசாயத்துக்கு திரும்பி 14 வருஷமாகுது. அன்னிலிருந்து வைத்திய செலவே இல்லாம போச்சி.. என் மனைவிக்கு இருந்த சர்க்கரை நோயும் கட்டுப்பாட்டுக்குள்ள வந்துருச்சி.

ஒரு காலத்துல 56 லட்சம் ரூபாய் கடன்காரனா இருந்த நான் இன்னிக்கு லட்சாதிபதியா இருக்கேன். ஒரு ஏக்கர், ரெண்டு ஏக்கர் மட்டுமில்ல, நூத்துக்கணக்கான ஏக்கர்லயும் இயற்கை விவசாயத்தை செய்யமுடியும். அதுக்கு நான்தான் உதாரணம். இயற்கை விவசாயம் செஞ்சா, இப்ப இருக்கற மாதிரியான மூணு இந்தியாவுக்கு சோறு போடமுடியும்''

தொடர்பு கொள்ள: 94435 82076

மரம் வளர்ப்பு மூலம் எப்படி கோடீஸ்வரனாக முடியும்?

புதுக்கோட்டை மாவட்டம் சேந்தன்குடி கிராமம். அங்கே தங்கசாமி என்றொரு விவசாயி. 35 வருடங்களுக்கு முன்பு விவசாயத்தால் நஷ்டப்பட்டுப்போய் மனம் கலங்கி நின்றார். ஊரில் கடுமையான வறட்சி. விவசாய நிலங்களை விற்று, கடன்களை அடைத்து ஏதாவது ஹோட்டலில் ‘சர்வர்’ வேலைக்கு சென்றுவிடலாமா என்று யோசித்தார்.



அன்று, அகில இந்திய வானொலியில் ஏதோ நிகழ்ச்சி கேட்டுக் கொண்டிருந்தார். ‘மரப்பயிரும் பணப்பயிரே’ என்கிற தலைப்பில் பேராசிரியர் ஒருவரின் உரை. அதுதான் தங்கசாமி வாழ்வின் திருப்புமுனை. சொத்தை விற்கும் முடிவினை மூட்டை கட்டி வைத்தார்.

நூறு தேக்கு மரங்களை வாங்கி தனது நிலத்தில் நட்டார். இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, அவை வளர்ந்து தன்னையும் தனது குடும்பத்தையும் பாதுகாக்கும் என்பது அவரது திட்டம். ஒரே ஆண்டிலேயே தங்கசாமி நட்ட மரங்கள் இருபது அடி வளர்ந்து அவரை உற்சாகப்படுத்தியது. இதே உற்சாகத்திலேயே நூறு மாங்கன்றுகளை நட்டார். அப்படியே நூறு முந்திரி, நூறு புளியங்கன்று என்று நட்டுக்கொண்டே சென்றார்.

வேம்பு, சந்தனம், ரோஸ்வுட், செஞ்சந்தனம், நெல்லி, புளி, மகோகனி என்று சுமார் நூறு வகையில் 5000 க்கு மேற்பட்ட மரங்களுடன், 25 ஏக்கர் அளவுக்கு விரிந்த காட்டுக்கு சொந்தக்காரர் ஆகிவிட்டார் தங்கசாமி. இந்த காட்டினுடைய இன்றைய மதிப்பு பல கோடி. ஹோட்டலில் சர்வர் வேலைக்குச் செல்ல திட்டமிட்டவர், இன்று கோடீஸ்வரர்.

தனது காட்டில் மட்டுமல்ல. நாடெங்கும் மரம் வளர்க்க ஊக்குவிப்பதுதான் தங்கசாமியின் லட்சியம். திருமணங்களுக்கு சென்றால் ‘மொய்’ எழுதமாட்டார். மரக்கன்றுதான் பரிசளிப்பார். புதுக்கோட்டை மாவட்டம் முழுக்க பயணித்து, எல்லாப் பள்ளிக்கூடங்களிலும் மரம் நட்டிருக்கிறார்.

இன்று உலகெங்கும் இருந்து, தங்கசாமி வளர்த்த காட்டை பார்க்க ஆராய்ச்சியாளர்கள் குவிகிறார்கள். பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கும் தங்கசாமியின் அனுபவங்கள், வேளாண் மாணவர்களுக்கு ஆராய்ச்சிப் பாடமாக போதிக்கப்படுகின்றன.

அதுசரி, மரம் வளர்ப்பு மூலம் எப்படி கோடீஸ்வரனாக முடியும்? ஆச்சரியமடையத் தேவையில்லை.. தங்கம், வெள்ளி, பிளாட்டினம், மார்பிள், கிரானைட் போன்ற உலோகங்கள், கனிமங்கள் மாதிரி மரங்களும் கூட ‘காஸ்ட்லி’ தான்.

ஒரு முத்தின செஞ்சந்தன மரத்தின் இன்றைய விலை இரண்டரை லட்சம். இங்கே பல நூறு செஞ்சந்தன மரம் நிக்குது. குறிப்பாக குமிழ்மரம். தேக்கு வகையைச் சார்ந்த இம்மரம் வெகுவேகமாக வளரும். ஒரே ஒரு மரம், எட்டு ஆண்டுகளில் ஒரு டன் அளவுக்கு வளர்ந்து நிற்கும். இன்றைய தேதியில் ஒரு டன் குமிழ் மரம் 8000 முதல் 10,000 வரை விலை போகின்றன. ஹெக்டேருக்கு சுமார் 1200 மரங்களை வளர்க்க முடியுமென்றால், லாபத்தை நீங்களே கணக்கிட்டு பாருங்கள்..

''நம்ம விவசாயிகளுக்கு நான் சொல்றது ஒன்னே ஒண்ணுதான்.. உங்க நிலம் எவ்வளவு இருக்கோ, அதை மூணா பிரியுங்க. ரெண்டு பங்குல மாத்தி மாத்தி விவசாயம் பண்ணி எப்படியும் போங்க.. அது உங்க உரிமை.. மிச்ச ஒரு பங்குல மட்டுமாவது கண்டிப்பா மரங்களை நடுங்க. உங்க சந்ததி பொழைச்சுக்கும். விவசாயிங்க மட்டும் இல்லை; அரசாங்கமும் இதை யோசிக்கணும்.

ஒரு மரம் பூமியிலிருந்து ஒரு சத்தை எடுத்து, இன்னொரு சத்தை பூமிக்கு கொடுக்கும். இந்த மரம் கொடுக்கும் சத்தை உண்டு செழிக்கும் இன்னொரு மரம், வேறொரு சத்தை பூமிக்கு கொடுக்கும். இப்படியே இந்த சங்கிலி பல்வேறு ஜாதி மரங்களுக்கும் தொடரும். காடு செழித்திருப்பதன் தத்துவம் இதுதான். தீர்க்கமான குரலில் பேசுகிறார் தங்கசாமி

Monday, September 7, 2015

தண்ணீருக்குத் தவம் கிடக்க வேண்டாம்

 மழை நீர் சேகரிப்புக்குப் புது வழிகாட்டும் விஞ்ஞானி
‘நிலத்தடி நீர் சேகரிப்பு இயற்கை நிகழ்வுகளை முறைப்படுத்தும். இங்கே செயல்படுத்தப்பட்டுள்ள நீர் சேகரிப்பு முறை மானுடத்துக்கு அர்ப்பணம்!’ என்ற அறிவிப்போடு, புதுக்கோட்டையிலிருந்து செங்கிப்பட்டி செல்லும் பாதையில் மு.சோழகம்பட்டி கிராமத்தில் ஒரு கல்வெட்டு இருக்கிறது. பிரம்மாண்டமாகத் தோண்டப்பட்ட குட்டையின் முன்னால் இந்த அறிவிப்புப் பலகை இருக்கிறது.
இதை வைத்தவர் காடு வளர்ப்பு விஞ்ஞானி டாக்டர் இ.ஆர்.ஆர். சதாசிவம். நூற்றுக்கணக்கான கிராமங்களில் காடுகளை வளர்த்து மண் வளத்தை, உணவு வளத்தை மீட்டெடுத்ததற்காகவும், மக்கள் வெளியேற்றத்தைத் தடுத்ததற்காகவும் 1998-ம் ஆண்டில் இந்திரா பிரியதர்ஷினி விருக்ஷாமித்ர விருதைப் பெற்றவர் இவர்.
புதுமை நீர்ப் பாய்ச்சல்
தற்போது நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் அவர் உருவாக்கியுள்ள ஐக்கியப் பண்ணை - கோவை பண்ணையில், மூலைக்கு மூலை இரண்டு ஏக்கர் முதல் ஐந்து ஏக்கர் வரை பிரம்மாண்டக் குட்டைகளை வெட்டி வைத்திருக்கிறார். துளியும் வீணாகாமல் இங்கே சேகரமாகும் மழைநீர்தான் இந்தப் பண்ணைக்கு ஆதாரம்.
இந்தப் பண்ணையில் பயிரிடப் பட்டிருக்கும் மா, பலா, மாதுளை, நெல்லி, காட்டுக்கத்தரி, கொடுக்காய்ப்புளி, செஞ்சந்தனம், தேக்கு உள்ளிட்ட 240-க்கும் மேற்பட்ட மர வகைகளுக்குப் பாத்தி கட்டப்படவில்லை, வாய்க்கால் வெட்டப்படவில்லை, மோட்டார் போட்டு நீர் பாய்ச்சவும் இல்லை. குட்டைகளின் மூலம் சேகரிக்கப்படும் மழைநீர் இயற்கையாகவே இந்த மரங்களுக்கு ஊடுருவுகிறது.
இதன் மூலம் 20 ஆண்டுகளுக்கு முன்பு வெறும் சுக்காம் பாறையாகக் காட்சியளித்த இந்தப் பூமியை, அடர்ந்த சோலைவனமாக இன்றைக்கு மாற்றியிருக்கிறார். இந்த மரங்கள் எதுவும் ரசாயன உரமோ, பூச்சிக்கொல்லி வாசமோ படவில்லை என்பது கூடுதல் விசேஷம்.
இப்படி அனுபவப் பாடமாகத் தான் கற்ற நீர் சேகரிப்பு நுட்பங்களை, மனித குலத்துக்கு அர்ப்பணம் செய்திருக்கும் சதாசிவம், இந்த முறை குறித்துப் பகிர்ந்துகொண்டது:
மழை இறங்கா மண்
“இப்போது போல் செ.மீ, மி.மீட்டரில் இல்லாமல் ஒரு உழவு மழை, இரண்டு உழவு மழை என்று மழையளவைக் குறிப்பிடுவது பரம்பரை விவசாய முறை. பூமியில் ஒரு அடி ஆழத்துக்குத் தண்ணீர் இறங்கியிருந்தால், அது ஒரு உழவு மழை. ஓரிரு முறை நல்ல மழை பெய்தாலே இலகுவான மண்ணில் ஓர் அடி ஆழத்துக்குத் தண்ணீர் இறங்கியிருக்கும்.
இது மண்ணுக்கு மண் வேறுபடும். சில நிலங்களில் தண்ணீர் இறங்கிக்கொண்டே இருக்கும். கொஞ்சம் கொஞ்சம் மழைநீர் இறங்கக்கூடியது செம்புரை மண் (laterite soil). இது ஒரு அடிமண். இந்த மண்ணின் தன்மைப்படி ஓர் அடிக்குக் கீழே, மழைநீர் அவ்வளவு சுலபமாக இறங்காது.
இந்த மண்ணில் எவ்வளவு மழை பெய்தாலும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் நிலத்தில் இறங்காமல் வழிந்தோடி கடலுக்குச் சென்றுவிடுகிறது. தஞ்சாவூர், காரைக்குடி, சிவகங்கை, திண்டுக்கல், புதுக்கோட்டை பகுதிகளில் இந்த மண் நிறைந்த நிலங்களே பெருமளவு காணப்படுகின்றன. இந்த மண்ணுள்ள நிலத்தை வளமாக்க வேண்டுமென்றால் அப்பகுதிக்கான சராசரி மழையளவைக் கணக்கிட்டு, அந்த மழைநீர் கடலுக்குச் செல்வதைத் தடுத்து, நீரைத் தேக்கும் குட்டைகளை வெட்டி நீரைச் சேகரித்துப் பயன்படுத்த வேண்டும்.
15 ஆண்டு கால முயற்சி
ஒரு முறை இப்படிச் செய்தால் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குத் தண்ணீர் பற்றாக்குறையே ஏற்படாது. உதாரணமாக, ஒரு உழவு மழையில் ஒரு ஏக்கருக்கு 20 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்கும். ஒரு குட்டையில் ஒரு சதுர அடிக்கு நாலரை லிட்டர் தண்ணீர் தேக்கலாம். ஒரு ஏக்கர் நிலத்துக்கு 44,440 சதுர அடி குட்டை வெட்டினால் ஒரு உழவு மழை தண்ணீரைத் தேக்கி வைக்கலாம்.
தோராயமாக 25 ஏக்கர் நிலமிருந்தால், அதை வளமாக்க இரண்டே முக்கால் ஏக்கர் அளவுக்கு ஏழு அடி ஆழத்துக்குக் குட்டை வெட்டினால், அதில் தேங்கும் நீர் 10 மாதங்களுக்குப் பயன்படும். அந்தக் குட்டையில் தேங்கும் நீரை அப்படியே விடும்போது, அதே ஆழத்துக்குப் பக்கத்து நிலங்களிலும் அது நிலத்தடி நீரைப் புதுப்பிக்கும். இந்த முறை மூலம் காலங்காலமாக நிலத்தடி நீர் காணாமல் போயிருந்ததும், மழைநீர் கடலுக்குச் சென்று விரயம் ஆவதும் தடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு குட்டையையும் சுற்றி 22 ஏக்கருக்கும் வெவ்வேறு மர வகைகளை நடலாம். அந்த மரங்களின் வேர்களே நிலத்தில் சுரக்கும் நீரை உறிஞ்சி, அடுத்த மரத்துக்கும் தரும். என்னுடைய பண்ணையில் மூன்று குட்டைகள் வெட்டப்பட்டுள்ளன. இங்கே 240 வகை மரங்கள் வளர்கின்றன. இந்த 15 ஆண்டு காலப் பரீட்சார்த்த முயற்சியில் இதைக் கண்டறிந்துள்ளேன்!” என்கிறார்.
செலவில்லை
இந்த நீர் சேகரிப்பு பிரம்மாண்டக் குட்டைகள் வெட்ட நிறைய செலவு ஆகாதா? “செலவே கிடையாது. இந்தக் குட்டைகளை வெட்டக் கனிமவளத் துறையில் அனுமதி வாங்கி, கூலியாகப் பாதி மண்ணை எடுத்துக்கொள்ளவும், மீதி மண்ணை நமக்குக் கொடுத்துவிடவும் மண் வியாபாரிகள் இருக்கிறார்கள். அவர்களே எல்லாவற்றையும் கவனித்துக்கொள்வார்கள்! அப்படித்தான் இங்கே இரண்டு ஏக்கர் முதல் ஐந்து ஏக்கர் அளவிலான மூன்று குட்டைகளை வெட்டியுள்ளேன்!” - எந்தச் சலனமும் இல்லாமல் சொல்கிறார் இ.ஆர்.ஆர்.சதாசிவம்.
சதாசிவம், தொடர்புக்கு: 9843014073
நன்றி - தமிழில் தி இந்து