Wednesday, April 20, 2016

மாடுகளுக்கு நாம் உணவு அளிக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை

மாடுகளுக்கு நாம் உணவு அளிக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை :
ஒன்று அது மாட்டிற்கு திருப்தியாக இருக்க வேண்டும், இரண்டு நிறைவாக இருக்க வேண்டும், மூன்று அதன் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் தேவையான ஊட்டத்தை அளிப்பதாக இருக்க வேண்டும். மேலும், மாடுகளுக்கு பழக்க வேண்டாத, செரிக்க இயலாத உணவை தவிர்க்க வேண்டும். தேவைக்கு அதிகமான ஊட்டமும் அதன் ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவிக்கும். எனவே, உணவு சரிவிகிதமாக இருக்க வேண்டும். இந்த வரையறைக்குள் நாம் தேர்ந்தெடுக்கும் தீவனம், பெரும்பாலும் நமது பண்ணையிலேயே கிடைக்கக் கூடியதாக இருக்க வேண்டும். வெளியிலிருந்து வாங்க வேண்டி இருந்தாலும் நமக்கு அருகாமையில் கிடைக்கக் கூடியதாகவும், பதப்படுத்தாத, இயற்கையான உணவாக இருப்பதும் அவசியம். (மாட்டுத் தீவன கம்பெனிகள் தயாரிக்கும் தீவனமும் விளையும் பொருட்களிலிருந்தே தயாரிக்கப்படுகின்றது. ஆனால், வெகு நாட்கள் கெடாமல் இருக்கவும், விற்பனைக்கும், போக்குவரத்திற்காகவும் பதப்படுத்தபடுகின்றது.) உணவிற்கு ஆகும் செலவு நமக்கு கிடைக்கும் பலன்களில், பாதிக்கும் குறைவாக இருக்க வேண்டும். மாட்டிற்கு அளிக்கும் உணவு, நமது உணவுடன் போட்டியாக இருக்கக் கூடாது. தானியம் மனிதனுக்கு - தவிடு மாட்டிற்கு, எண்ணெய் மனிதனுக்கு - பிண்ணாக்கு மாட்டிற்கு, பருப்பு மனிதனுக்கு - பொட்டு மாட்டிற்கு, சோறு மனிதனுக்கு - கஞ்சியும், கழுநீரும் மாட்டிற்கு என்று நமது உணவு தயாரிப்பில் எஞ்சியது மாட்டிற்கு என்று அமைய வேண்டும்.
இவை தானா, இன்னும் வேறு கட்டுப்பாடுகள் உள்ளதா என்று மலைக்க வேண்டாம். மாட்டிற்கு என்று இதை எழுதத் துணிந்தாலும், ஒரு முறை படித்துப் பார்த்தால், நாம் நமது உணவிற்கும் இதே வரையறைகளைப் பயன்படுத்துகிறோம் (பயன்படுத்த வேண்டும்!). எனவே, மாடுகளின் வயிறு அமைப்பின் வேறுபாட்டையும், அதன் செரிக்கும் தன்மையின் வித்தியாசத்தையும் சிறிது தெரிந்து கொண்டால் போதும். தீவனம் என்ன, எவ்வாறு, எவ்வளவு என்பதை எளிதாக முடிவு செய்யலாம்.
மாடுகளின் வயிறு நான்கு அறைகளைக் கொண்டது. அவற்றில் முதல் அறை மிகப்பெரியது. மாடுகள் சாப்பிடும் போது உணவை நன்றாக கூழாக அரைப்பதில்லை. அவை மேயும் போது கவனித்தீர்களானால், முன் பற்களால் புல்லை வெட்டி, உமிழ் நீருடன் கூட்டி, துண்டாக்கி, அப்படியே விழுங்கி விடும். இந்த உணவு முதல் அறையாகிய அசைவூண் வயிறுக்கு செல்கிறது. அங்கே, பல வித நுண்ணுயிர்களுடன் கலந்து இலேசாக சிதைகின்றது. பின், மாடுகள் அசை போடுவதை கவனித்திருப்பீர்கள். சிறிது நொதித்த நிலையில் உள்ள உணவை அசைவூண் வயிற்றிலிருந்து மீண்டும் வாய்க்கு கொண்டு வந்து, கடைவாய் பற்களால் நன்கு அரைத்து, கூழாக்கி மீண்டும் விழுங்கும். இது இரண்டாவது அறைக்கு சென்று, தேவையில்லாத பொருட்கள் அங்கே தங்கி விடும். பின் மூன்றாவது அறைக்கு சென்று, திரவ நிலையில் உள்ள பொருட்கள் அனைத்தும் உறிஞ்சப்பட்டு நான்காவது அறையான செரிக்கும் வயிறுக்கு செல்லும். இதற்குள்ளாக, உணவு பல வகை நுண்ணுயிர்கள், என்ஸைம்கள் ஆகியவற்றுடன் கலந்து செரிப்பதற்கு தயாராக இருக்கும். இந்த செரிக்கும் அறை நமது வயிறைப் போன்ற அமைப்பு கொண்டது. நமக்கு செரிமானம் ஆவது போல் இந்த அறையில் உணவு செரித்து உடலுக்கு தேவையான ஊட்டத்தை அளிக்கிறது. இந்த அமைப்பினாலேயே மாடுகளால், நமக்கு செரிக்க கடினமான பொருட்களைக் கூட உண்டு செரிக்க இயல்கிறது.
மாடுகளுக்கான உணவை மூன்று வகையாக பிரிக்கலாம் :
பசுந்தீவனம், உலர்தீவனம், அடர்தீவனம். பசுந்தீவனம் என்பது புற்கள், மர இலைகள் போன்ற பசுமையாக உள்ள பொருட்கள்.
உலர்தீவனம் என்பது காய்ந்த நிலையில் உள்ளவை :
வைக்கோல், சோளத்தட்டை, கடலைச் செடி போன்றவை.
அடர்தீவனம் என்பது தானியத்தின் எஞ்சிய பகுதி :
தவிடு, பிண்ணாக்கு, பொட்டு போன்றவை.
இந்த தீவனங்களை என்ன அளவில் அளிக்க வேண்டும்?
மாடுகளும் குழந்தைகளைப் போல், எல்லா உணவும் தேவைக்கு அதிகமாக இருந்தால், பிடித்த உணவை மட்டுமே வயிறு நிறைய உட்கொண்டு விடும். எனவே, நாம் தான் மாடுகள் சரிவிகிதமாக உண்ணும்படி கலந்து அளிக்க வேண்டும். பசுந்தீவனத்திலும், உலர்தீவனத்திலும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே, எளிதில் செரிக்கும் தன்மை கொண்டது. ஊட்டச்சத்து அதன் எடையுடன் ஒப்பிடும் பொழுது குறைவாக இருக்கும். ஆனால், கனிம உப்புக்களும், வைட்டமின்களும் அதிகம். இவை மாட்டிற்கு நல்ல ஆரோக்கியத்தையும், நோய் எதிர்ப்புத்தன்மையையும் வழங்கும். இந்த வகை தீவனத்தின் கொள்ளளவு அதிகமாக இருப்பதால், மாட்டிற்கு வயிற்றை நிரப்பி, திருப்தியை அளிக்கும். மாட்டின் முழு உணவுத் தேவையையும் இந்த இரண்டு தீவனம் மூலமே அளிப்பது சிறந்தது. அது இயலாத போது, அடர் தீவனத்தை, ஈடு கட்டுவதற்காக அளிக்கலாம். அடர் தீவனம் மட்டுமே அளிப்பது சரிவிகித உணவாகாது. அடர் தீவனத்தில் ஊட்டச் சத்துக்கள் அதிகம். ஆனால், செரிக்கும் திறன் குறைவு. பல வித தவிடுகள், பொட்டுகள், பிண்ணாக்கு போன்றவற்றை கலந்து கலப்பு தீவனமாக அளிக்கலாம்.
முதலில் எவ்வளவு உணவு அளிப்பது என்பதை உலர் எடையில் (dry weight) அளக்க வேண்டும். ஒவ்வொரு தீவனத்தின் எடை அதன் உலர் எடையை விட அதிகமாக இருக்கும். அடர்தீவனத்திலும், உலர்தீவனத்திலும் 90 விழுக்காடு உலர் எடை இருக்கும். அதாவது, 10 கிலோ அடர்தீவனத்தின் உலர் எடை 9 கிலோவாகும். 5 கிலோ வைக்கோலின் உலர் எடை 4.5 கிலோவாகும். பசுந்தீவனத்தை நாம் இரண்டு விதமாக அளிக்கலாம். ஒன்று மாடுகளை மேய்ப்பது. அந்த வசதி இல்லாத போது, பசுந்தீவனப் பயிர்களை விளைவித்து, மாடுகளுக்கு வெட்டி அளிப்பது (stall fed). மாடுகள் மேயும்போது பச்சை புற்களுடன் சில காய்ந்த புற்களும் இருக்கும். எனவே, அதன் உலர் எடை 30 விழுக்காடாக இருக்கும். தீவனப் பயிர்களை வெட்டி அளிக்கும் போது அவற்றின் உலர் எடை 25 விழுக்காடே இருக்கும். அதாவது, ஒரு மாடு 10 கிலோ புல் மேய்ந்தால் அதன் உலர் எடை 3.3 கிலோ. அதுவே, நாம் புல்லை வெட்டி அளித்தால் 10 கிலோ புல்லின் உலர் எடை 2.5 கிலோ என்று கணக்கெடுத்துக் கொள்ள வேண்டும். மாடுகள் மேயும் போது எவ்வளவு புல் மேய்கிறது என்பதை கணிப்பது, மேய்ச்சல் நிலத்தின் தன்மையையும், மாட்டின் மேயும் வேகத்தையும், அதன் பசியையும் பொறுத்து மாறுபடுவதால், மிகவும் கடினம். எனவே, நீங்களே உங்கள் இடம், மாடு அகியவற்றை பார்த்து ஒரு தோராயமான கணக்கு வைத்துக் கொள்ளவும்.
மாடுகளின் தீவனத் தேவையை அதன் உடல் எடையையும், அது அளிக்கும் பாலின் எடையையும் பொறுத்து கணிக்க வேண்டும். மாட்டின் எடையை எவ்வாறு அறிவது. எல்லா பண்ணைகளிலும், மாடுகளை நிற்க வைத்து எடை போடும் வசதி இருக்காது. அது போன்ற சந்தர்ப்பங்களில் தோராயமாக எடையை கணக்கிட ஒரு சூத்திரம் உள்ளது. முதலில், மாட்டின் நெஞ்சு சுற்றளவை அங்குலத்தில் அளக்கவும். முன்னங்கால்களுக்கு பின்னால் ஒரு கயிற்றை சுற்றி அளவெடுக்கலாம். பின்னர், மாட்டின் முன் காலிலிருந்து வால் வரை உள்ள நீளத்தையும் அங்குலத்தில் அளக்கவும். பிறகு கீழ்க்கண்ட சூத்திரத்தை பயன்படுத்தவும்.
எடை = (சுற்றளவு X சுற்றளவு X நீளம்) / 660
அதாவது, ஒரு மாட்டின் நெஞ்சு சுற்றளவு 58 அங்குலம், அதன் நீளம் 48 அங்குலம் என்றால் அதன் எடை 58X58X48/660 = 161472/660 = 244 கிலோ (தோராயமாக). சுமார் 200 கிலோ எடையுள்ள மாட்டிற்கு சுமார் 3.5 கிலோ உலர் எடை அளவு தீவனம் தேவைப்படும். அதற்கு மேல் ஒவ்வொரு 50 கிலோ எடைக்கும் 1 கிலோ உலர் எடை சேர்த்துக் கொள்ளவும். அதாவது, நமது உதாரணத்தில் உள்ள மாட்டிற்கு 3.5+1=4.5 கிலோ உலர் எடை தீவனம் தேவை. 300 கிலோ எடையுள்ள மாட்டிற்கு 3.5+1+1=5.5 கிலோ உலர் எடை தீவனம் தேவை.
பால் கறக்கும் மாடுகளுக்கு ஒவ்வொரு 2.5 லிட்டர் பாலுக்கும் ஒரு கிலோ உலர் எடை சேர்க்க வேண்டும். நமது உதாரணத்தில் உள்ள மாடு ஒரு நாளைக்கு 5 லிட்டர் பால் கறக்கிறது என்று வைத்துக் கொண்டால் அதற்கு பாலுற்பத்திக்கென 2 கிலோ உலர் எடை தீவனம் அளிக்க வேண்டும். மொத்தமாக, 244 கிலோ எடையுள்ள, 5 லிட்டர் கறக்கும் மாட்டிற்கு ஒரு நாளைக்கு 4.5 + 2 = 6.5 கிலோ உலர் எடையுள்ள தீவனம் அளிக்க வேண்டும்.
சரி, இந்த 6.5 கிலோ உலர் எடையுள்ள தீவனத்தை எப்படி அளிப்பது? முன்னே சொன்னது போல் பசுந்தீவனம் மற்றும் உலர்தீவனம் மூலம் அளிப்பது சிறந்தது. இந்த 6.5 கிலோவில் மூன்றில் இரண்டு பங்கு பசுந்தீவனம் மூலமும் மீதி மூன்றில் ஒரு பங்கு உலர் தீவனம் மூலமும் அளிக்க வேண்டும். அதாவது, சுமார் 4.350 கிலோ உலர் எடை பசுந்தீவனம், 2.150 கிலோ உலர் எடை உலர் தீவனம். இது உலர் எடை என்பதை கவனத்தில் கொள்ளவும். இதிலிருந்து உண்மை எடையை கண்டுபிடிக்க அந்தந்த தீவனத்தின் உலர் எடை விழுக்காட்டினால் வகுக்கவும். அதாவது, பசுந்தீவனம் - தீவனப்புல் வெட்டி அளிப்பதானால் 4.350/0.25 = 17.400 கிலோ அளிக்க வேண்டும். மேய விடுவதானால் குறைந்தது 4.350/0.3 = 14.5 கிலோ எடையுள்ள புற்களை மேய விடவும். உலர் தீவனம் 2.150/0.9 = 2.400 கிலோ என்ற அளவில் அளிக்கவும்.
மேற்சொன்ன அளவிற்கு புற்கள் (பசுந்தீவனம்) இல்லாத போது அடர் கலப்பு தீவனத்தைக் கொண்டு ஈடு கட்டலாம். கலப்பு தீவனத்திற்கு தேவையானவற்றை பெரும்பாலும் நாம் வெளியிலிருந்து காசு கொடுத்து வாங்க வேண்டும் என்பதாலும், அது மாட்டின் வயிற்றுக்கு நிறைவைத் தராது என்பதாலும், அது மொத்த உலர் எடையில் மூன்றில் ஒரு பங்கை விட அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதாவது, 6.5 கிலோ உலர் எடையில் அது 2.150 கிலோவை விட மிகுதியாக ஆகக் கூடாது. எனவே அதன் உண்மை எடை 2.150/0.9 = 2.400 கிலோவாக இருக்க வேண்டும். இப்போது, மீதம் உள்ள 4.350 கிலோ உலர் எடையை மீண்டும் பசுந்தீவனத்தின் மூலமும் உலர்தீவனத்தின் மூலமுமே நாம் பூர்த்தி செய்ய வேண்டும். மீண்டும், பசுந்தீவனத்தின் மற்றும் உலர்தீவனத்தின் எடை விகிதம் 2:1 என்றே இருக்க வேண்டும். அதாவது, 4.350 கிலோவில் மூன்றில் இரண்டு பங்கு, 2.900 கிலோ பசுந்தீவனமும், மூன்றில் ஒரு பங்கு, 1.450 கிலோ உலர் தீவனமும் அளிக்க வேண்டும். மீண்டும், உண்மை எடை பசுந்தீவனத்திற்கு - தீவனப்புல் வெட்டி அளிப்பதானால் 2.900/0.25 = 11.600 கிலோ, மேய விடுவதானால் 2.900/0.3 = 9.700 கிலோ. உலர் தீவனம் 1.450/0.9 = 1.600 கிலோ.
ஆ! இவ்வளவு கணக்கு போட வேண்டுமா? விவசாயிகளும், மாட்டுப் பண்ணைகளில் உள்ளவர்களும் இவ்வளவு கணக்கு பார்த்தா தீவனம் அளிக்கிறார்கள்!!
மிகச் சிறிய பண்ணை, அதாவது இரண்டு மூன்று மாடுகள் மட்டும் இருந்தால், ஒவ்வொரு மாட்டிற்கும் கறக்கும் காலத்தில் இவ்வளவு, சினையாக இருக்கும்போது இவ்வளவு, பால் மறந்தால் இவ்வளவு என்பது பழக்கத்தாலேயே கட்டுப்பட்டுவிடும். மிகப் பெரிய பண்ணைகளில் ஒரே அளவு கறக்கும் மாடுகள், கறவை மறந்த மாடுகள் என்று குழுக்களாக பிரித்து தீவனம் அளிப்பது சிறந்தது. பாலின் அளவு குறைய, அதிகரிக்க குழுக்களை மாற்றி அமைத்துக் கொள்வதும் அவசியம். நடுத்தர பண்ணைகளில் குழுவாக அமையும் மாடுகளை பிரித்தும், தனியாக உள்ள மாடுகளுக்கு கவனித்து தேவையான அளவு மட்டும் தீவனம் அளிப்பது மிகவும் முக்கியம். முதல் முறையாக செய்யும் போது சிறிது கடினமாக இருக்கும். சில மாதங்களுக்கு பிறகு நாம் எவற்றையெல்லாம் கவனிக்க வேண்டும் என்பது பழகி எளிதாகி விடும். தேவைக்கு அதிகமாக தீவனம் அளித்தால் செலவும் அதிகம், மாட்டின் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். தேவையான அளவு மேய்ச்சல் நிலம் இருந்தால், இயற்கையாகவே மாடுகளின் தீவனம் எடுக்கும் அளவு கட்டுக்குள் வந்து விடும்.

Wednesday, February 10, 2016

வாருங்கள், விவசாயம் செய்வோம்!

"வேறு எதையும்விட, இன்றைக்கும் விவசாயம்தான் லாபகரமான தொழில். ஒரு நெல் விதைத்தால், ஆயிரம் நெல் விளையும். ஒரு எள் விதைத்தால், ஆயிரம் எள் விளையும். ஆனால், ஒரு கிலோ பிளாஸ்டிக்கில் இருந்து, முக்கால் கிலோ பிளாஸ்டிக்தான் எடுக்க முடியும். ஒரு கிலோ இரும்பை உருக்கினால், அரை கிலோ தான் கிடைக்கும். ஒன்றை ஆயிரம் ஆக்குவது லாபமா? ஒன்றைப் பாதி ஆக்குவது லாபமா?'' - அவர் கேட்பதில் இருக்கும் உண்மை சுரீர் என்று உறைக்கிறது. அவரை ஒரு மணி நேரம் பேச விட்டுக் கேட்டால், 'மூட்டை முடிச்சைக் கட்டிக்கிட்டு ஊருக்குக் கிளம்பிரலாமா?’ என்று நகரத்தில் வேலை பார்க்கும் எந்த விவசாயி வீட்டுப் பிள்ளையும் நினைப்பான். அழிவின் விளிம்பில் நிற்கும் விவசாயத்தின் மீது நம்பிக்கை விதை விதைக்கிறார் பாமயன். சுமார் 15 ஆண்டுகளாக இயற்கை விவசாயம்குறித்து மாநிலம் முழுவதும் பயிற்சி அளித்துவருவதில் முக்கியமானவர். வேளாண் விளைபொருட்களை லாபகரமாக விற்பது எப்படி என்பதை நடைமுறையில் செய்துகாட்டும் வேளாண் பொருளியல் நிபுணர்.

மதுரை திருமங்கலத்தில் இருந்து குற்றாலம் செல்லும் சாலையில், சோலைப்பட்டி கரிசல் மண் தோட்டத்தில் பாமயனைச் சந்தித்து உரையாடியது ஓர் அற்புதமான அனுபவம்.
''நான் விவசாயி வீட்டுப் பிள்ளை. திருநெல்வேலி, தென்காசி அருகில் சுந்தரேசபுரம் என் சொந்த ஊர். அப்பாவின் மரணத்துக்குப் பின்பு, திருமங்கலத்துக்கு வந்துவிட்டோம். மனோதத்துவம், சமூகவியல், இதழியல் எல்லாம் படித்துவிட்டு, 'ஒப்புரவு’, 'நேயம்’ என்கிற சிறு பத்திரிகைகள் நடத்தி, கடைசியில் திண்டுக்கல்லில் இருந்து வெளிவந்த 'புதிய கல்வி’ சுற்றுச்சூழல் பத்திரிகையில் நான்கு ஆண்டுகள் பணிபுரிந்தேன். அந்தக் காலகட்டத்தில் அறிமுகமான 'பூவுலகின் நண்பர்கள்’ நெடுஞ்செழியன்தான் என்னை சுற்றுச்சூழல் பக்கம் திருப்பிவிட்டார். கடலூர், தூத்துக்குடி, கூடங்குளம் எனச் சூழல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குப் போவோம்; பேசுவோம்; எழுதுவோம்.
ஒருகட்டத்தில் 'இப்படி எல்லாவற்றையும் விமர்சனம் செய்துகொண்டே இருந்தால் போதுமா? நாம் ஏதாவது செய்ய வேண்டாமா?’ என்று தோன்றியது. அப்படி நினைத்த 10 நண்பர்கள் ஒன்றுகூடினோம். அதில் பத்திரிகையாளர்கள், பொறியாளர்கள், இடதுசாரிகள் எல்லோரும் உண்டு. அப்போது, 'இன்றைய சுற்றுச்சூழல் பிரச்னையால் மிக மோசமாகப் பாதிக்கப்படுவது விவசாயிகள்தான். ஆகவே, அவர்களிடம் வேலை செய்வோம்’ என்ற முடிவில் 'தமிழக விவசாயிகள் தொழில்நுட்பக் கழகம்’ என்ற பெயரில் ஒருங்கிணைந்தோம். இது 2000-ல் நடந்தது. நம்மாழ்வார் போன்ற அனுபவம் வாய்ந்த இயற்கை விவசாய நிபுணர்களை அழைத்து, கிட்டத்தட்ட தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பயிற்சி கொடுக்கத் துவங்கினோம்.
ரசாயன உரங்களையும் பூச்சிக் கொல்லிகளையும் முற்றாக ஒதுக்கி, பண்ணையில் கிடைப்பதை வைத்து தற்சார்புடன் வெற்றிகரமாக விவசாயம் செய்வதைப் பற்றிய எங்களின் பயிற்சி, விவசாயிகளிடத்தில் பெரிய வரவேற்பைப் பெற்றது. எங்கள் குழுவில் இருந்த எல்லோருமே விவசாயம் செய்ததால், புத்தகத்தில் படித்ததை ஒப்பிக் காமல் அனுபவங்களைச் சொன்னோம். இப்படிக் கடந்த 12 ஆண்டுகளில் சுமார் 15 ஆயிரம் விவசாயிகளுக்கு இயற்கை விவசாயப் பயிற்சி கொடுத்துள்ளோம்.
நம் விவசாயிகள் களை, பூச்சிகள் இரண்டையும்தான் பெரிய பிரச்னைகளாகச் சொல்வார்கள். ஆனால், உண்மை அது அல்ல. பூச்சிகளைப் பொறுத்தவரை முட்டை, புழு, கூட்டுப்புழு, அந்துப்பூச்சி என்று நான்கு பருவம் உண்டு. பூச்சிமருந்து தெளிக்கும்போது முட்டைக்குள் இருப்பதும், கூட்டுக்குள் இருக்கும் கூட்டுப்புழுவும் பாதிக்கப்படுவது இல்லை. அப்புறம், பூச்சிமருந்து தெளித்து என்ன பலன்? இதையும் தாண்டி, எல்லா உயிரினங்களும் தலை முறைகள் தோறும் தன்னைத்தானே தகவமைத்துக்கொள்கின்றன.
பூச்சிகளின் வாழ்நாள் இரண்டு வாரம், மூன்று வாரம்தான். ஒரு வருடத்தில் பூச்சி, பத்து தலைமுறைகளையே கடந்திருக்கும். பூச்சிக்கொல்லி தெளிக்கும்போது ஒவ்வொரு தலைமுறையிலும் அந்த மருந்தின் வீரியத்தைத் தாங்கிக்கொள்ளும் சக்தி பூச்சிக்கு அதிகரித்துக்கொண்டேபோகிறது. கடைசியில் பூச்சிக்கொல்லியின் வீரியத்தில் விவசாயி செத்துவிழுவார்... பூச்சி பறந்துபோகும். இதுதான் இங்கு நடக்கிறது. நாங்கள், சில இலை தழைகளைப் போட்டு பூச்சிகளை எளிமையாகக் கட்டுப்படுத்த வழி சொல்கிறோம்.
இதேபோலத்தான் வயல்களில் வளரும் களையும். நமக்கு உடம்பு முடியாமல் போனால் காய்ச்சல் வருவதுபோல, மண்ணில் சத்துக் குறைபாடு ஏற்படும்போது களை விளைகிறது. சுண்ணாம்புச் சத்து குறைந்தால், துத்திச் செடிகள் முளைக்கும். இதற்குத் தீர்வு, அந்தத் துத்திச் செடிகளை வெட்டி, திருப்பி அந்த மண்ணுக்கே கொடுக்க வேண்டும். எந்த களைச் செடி வயலில் முளைத்தாலும், அதை வெட்டி மறுபடியும் மண்ணுக்கே கொடுத்துவிட்டால் சத்துக் குறைபாடு சரிசெய்யப்படும். களையும் இல்லாமல் போகும். இதைச் சொன்னபோது, முதலில் விவசாயிகள் நம்பவில்லை. செயல்முறை விளக்கம் செய்துகாட்டிய பிறகே நம்பினார்கள்''- இப்படி பாமயன் விவரிக்கும் அனுபவத்தின் உண்மைகள் நம்பிக்கை ஊட்டுபவை.
இவர் பங்காற்றும் அமைப்பு, இயற்கை விவசாயம் குறித்த எளிமையான விளக்கங் கள் அடங்கிய சிறு புத்தகங்களையும் வெளியிட்டுள்ளது. 'தாளாண்மை’ என்ற சிறு இதழையும் விவசாயிகளுக்காகத் தொடர்ந்து நடத்திவருகிறது.
''நகர வாழ்க்கை பிடிக்காத பலர், 'எல்லாத்தையும் விட்டுட்டு ஊருக்கே போயிடணும்’ என்று பல சந்தர்ப்பங்களில் நினைக்கிறார்கள். 'விவசாயத்தில் அவ்வளவு வருமானம் வராதே’ என்ற எண்ணம் அதைத் தடுக்கிறது. ஆனால், நிச்சயம் விவசாயத்தில் வருமானம் பார்க்க முடியும். ஒரு பொறியியல் பட்டதாரி நகரத்தில் 35 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் நான்கு ஏக்கர் நிலத்தில் அதைவிடச் சற்றே கூடுதலான பணத்தை விவசாயத்தில் எடுக்க முடியும். ஆனால், நிச்சயம் குறையாது. யாரோ ஒருவருக்காக இரவும் பகலும் கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்து உடம்பைக் கெடுத்து உழைப்பதற்குப் பதிலாக, உங்களுக்காக, உங்கள் நிலத்தில், விருப்பப்பட்ட நேரத்தில் உழைப்பதில் என்ன சிரமம் இருக்க முடியும்? மன உளைச்சல் இல்லை; மருந்துச் செலவு இல்லை; நினைத்த நேரத்தில் இளநீர் வெட்டிக் குடிக்கலாம்; நாட்டுக்கோழி சாப்பிடலாம்... இந்த மகிழ்ச்சிக்கும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் ஒரு விலை வைத்தால் உங்கள் வருமானம் லட்சம் ரூபாயைத் தாண்டும். ஆனால், முதலீடு இல்லாமல் இது வராது. பொறியியல் படிக்க எத்தனை லட்சம் செலவு செய்கிறோம்? அதேபோல்தான் விவசாயத்துக்கும் முதலீடு வேண்டும். சொந்தமாக நிலம் இல்லை எனில், குத்தகைக்கு எடுத்துச் செய்யலாம். இதற்கான மாதிரிப் பண்ணைகளை நாங்கள் உருவாக்கிக்கொண்டு இருக்கிறோம்.
பொதுவாக, 'அரிசி விலை ஏறிப்போச்சு, காய்கறி விலை ஏறிப்போச்சு’ என்று எல்லோரும் சொல்கிறோம். ஆனால், உண்மை என்ன? சர்வோதயா இயக்கத் தலைவர்களில் ஒருவரான ஜே.சி.குமரப்பா, 'இன்றுள்ள சூழலில் விவசாய விலை பொருட்களுக்கு உண்மையான விலை கொடுத்தால், நகரத்தில் இருக்கும் யாருக்கும் அதை வாங்கிக் கட்டுப்படி ஆகாது; அப்புறம் அவன் மானியம் இல்லாமல் வாழ முடியாது’ என்று சொன்னார். அதுதான் உண்மை. உதாரணத்துக்கு, நெல்லை எடுத்துக்கொள்வோம். 120 நாட்கள் ராப்பகலாக உழைக்க வேண்டும். அந்த உழைப்பு, அதற்கான முதலீடு, கடனுக்கான வட்டி, பராமரிப்பு எல்லாவற்றையும் ஒரு தொழிற்சாலை முதலீடுபோலக் கணக்கிட்டால், ஒரு குவிண்டால் நெல்லின் மதிப்பு குறைந்தது 4,000 ரூபாய் வந்துவிடும். ஒரு கிலோ அரிசி 100 ரூபாயைத் தாண்டும். இந்தச் சுமையை ஒவ்வொரு விவசாயியும் தன் தோளில் சுமக்கிறான்.
ஒரு பொருள் எங்கு விளைகிறதோ, அங்கு நுகரப்படக் கூடாது. தஞ்சாவூர் நெல், அமெரிக்காவில் சாப்பிடப்பட வேண்டும். ஆஸ்திரேலிய ஆப்பிளை சேலத்துக்குக் கொண்டு வர வேண்டும் அதாவது, தற்சார்பு என்று ஒன்று இருக்கவே கூடாது. இதுதான் இன்றைய உலகமயத்தின் அடிப்படை. ஆனால், நாங்கள் இதற்கு எதிராக விவசாய உற்பத்தி, விளை பொருட்களைப்பயன் படுத்துவது எல்லாமே அந்தந்தப் பகுதிகளில் தற்சார்புடன் இருக்க வேண்டும் என்கிறோம். வள்ளுவன் சொன்னதுதான்...
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும்!....
தரிசு நிலம் அரசுக்கு!
'எந்த ஒரு விவசாய விளைபொருளையும் மதிப்புக்கூட்டி விற்க வேண்டும்’ என்பது பாமயன் வலியுறுத்தும் முக்கியமான கருத்து. இதன் ஒரு மாதிரியாக, மதுரை அருகே பாப்பநாயக்கன்பட்டி என்னும் கிராமத்தில் 20 விவசாயிகளை ஒருங்கிணைத்து 40 ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். அதில் இருந்து நூல் எடுத்து, கைத்தறியில் நெய்து, இயற்கை முறை சாயம் பயன் படுத்தி, சட்டைகள் தைத்து விற்கி றார்கள். தேங்காய் சிரட்டையில் சட்டையின் பட்டன். 'துகில்’ என்று பெயரிடப்பட்ட இந்தச் சட்டைகள், சந்தையில் விற்பனையாகும் காட்டன் சட்டைகளின் விலையைவிடக் குறைந்த விலையே. வரகு, குதிரை வாலி இவற்றை அரைத்து அரிசியாக விற்பது, இயற்கை விவசாய அரிசி, கடலை எண்ணெய், வெல்லம் எனப் பல பொருட்களை மதிப்புக் கூட்டி விற்கின்றனர். யார் கேட்டாலும் இதற்கான ஆலோசனை மற்றும் தொழில்நுட்பத்தையும் தருகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் ரியல் எஸ்டேட் என்ற பெயரில் பல்லாயிரக் கணக்கான நிலம் தரிசாகக்கிடக்கிறது. ''இதைச் சரிசெய்ய எளிமையான வழி, 'இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து தரிசாகக்கிடக்கும் நிலத்தை அரசு எடுத்துக்கொள்ளும்’ என்று ஒரு சட்டம் போட்டால் போதும். விறுவிறுவென மரம் நடுவார்கள், விவசாயம் செய்வார்கள். பெரும் முதலீடு விவசாயத்தில் குவியும். செயற்கையான ரியல் எஸ்டேட் மாயையில் பணத்தைக் கொட்டுவதும் நிற்கும்'' என்கிறார் பாமயன்.

Monday, February 8, 2016

மல்லி...‘ சொல்லி அடிக்கும் ‘கில்லி!‘

மல்லி...‘ சொல்லி அடிக்கும் ‘கில்லி!‘
நிச்சய லாபம் தரும் சாகுபடி..

10 நாட்களில் நீங்களும் பணக்காரர் ஆகலாம்!', ‘30 நாட்களில் 3 லட்சம் சம்பாதிக்கலாம் வாங்க!', '40 நாளில் 4 லட்சம் ஈட்டுவது எப்படி?'
இப்படி உங்களை லட்சாதிபதிகளாகவும், கோடீஸ்வரர்களாகவும், மாற்றும் வண்ணம் தன்னம்பிக்கையைத் தட்டி எழுப்பும் புத்தகங்களை இந்த உடன்பிறப்புக்கள் வாசித்ததில்லை. இருந்தாலும் '45 நாட்களில் நல்ல வருமானம் பார்க்க முடியும்' என்பதை விவசாயத்தில் நிரூபித்துக் கொண்டுள்ளனர். அவர்கள் கையில் எடுத்திருப்பது லாபம் தரும் கொத்துமல்லித்தழைச் சாகுபடி. இதில் சொல்லி வைத்து கில்லி அடிக்கும் அந்த உடன்பிறப்புக்களை, ‘மல்லி பிரதர்ஸ்’ என்றே இப்பகுதி மக்கள் அழைக்கின்றனர். கே.வி. மணி மற்றும் பாலசுப்ரமணி என்கிற அந்தச் சகோதரர்களை கோவை மாவட்டம், பொங்கலூர் அருகில் உள்ள கருடமுத்தூர் கிராமத்தில் இருக்கும் அவர்களின் வயல்காட்டில் சந்தித்தோம்.
பெண்கள் பலரும் பாத்திகளில் இருந்து மல்லித்தழைகளை பறித்து கட்டுகளாக்கிக் கொண்டிருக்க... ''ம்... ஆகட்டும். மார்க்கெட்டுக்கு நேரமாச்சு’’ என்று உசுப்பிவிட்டபடி நின்ற கே.வி.மணி, அப்படியே நம் பக்கம் திரும்பி,
''ஆரம்பத்துல பருத்தி, வெங்காயம், வாழை, மஞ்சள்னு எல்லாரையும் போல பயிர் செய்துகிட்டிருந்தோம். உரம், பூச்சி மருந்து, ஆள் கூலி எல்லாம் ரொம்ப அதிகமாகிக்கிட்டே போகுது. மூணு ஏக்கர் வெச்சுக்கிட்டு விவசாயம் பார்க்கற சிறு விவசாயியான எங்களால தாக்குப்பிடிக்க முடியல. குறைஞ்ச நாள்ல பலன் தர்றது காய்கறிகள்தான்னு முடிவெடுத்து, கால் ஏக்கர் அளவுக்கு கொத்துமல்லித்தழையைப் போட்டோம். நாங்களே அறுவடை பண்ணி, திருப்பூர் காய்கறி மார்க்கெட்டுல இருக்கற கமிஷன் கடைகள்ல கொடுக்க ஆரம்பிச்சோம். வேன் வாடகை, கமிஷன் இதெல்லாம் போக... ஓரளவு வருமானம் கிடைச்சுது. பெரிசா சொல்லிக்கிற மாதிரியில்ல. திருப்பூர் பகுதியை ஒட்டி விவசாயிங்க நிறைய பேர் மல்லித்தழை சாகுபடி செய்றாங்க. அதெல்லாம் திருப்பூர் மார்க்கெட்டுக்குதான் வரும். அதேபோல, வெளியூர் வியாபாரிகள் வரத்தும் அங்கே குறைவு. அதனாலதான் எதிர்பார்த்த அளவுக்கு விலை கிடைக்கலை.
இதைப்பத்தி யோசிச்சிக்கிட்டிருந்தப்ப 'மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுக்கு கேரளா வியாபாரிங்க நிறையப் பேர் வர்றாங்க. மேட்டுப்பாளையம் பகுதியில மல்லித்தழை சாகுபடி குறைவுங்கறதால அந்த மார்க்கெட்டுல நல்ல லாபம் கிடைக்கும்'னு ஒருத்தர் சொன்னார்.
அடுத்தநாளே மல்லித்தழைக் கட்டுகளை பஸ்ஸுல ஏத்தி, 100 கி.மீ. தொலைவுல இருக்கற மேட்டுப் பாளையம் மார்க்கெட்டுக்குக் கொண்டு போனேன். அது, ரொம்பப் பெரிய மார்க்கெட். ஊட்டி, மதுரை, திருச்சினு வெளியூர்கள்ல இருந்தும் கேரளா, கர்நாடகானு வெளிமாநிலங்கள்ல இருந்தும் நிறைய வியாபாரிங்க வந்துபோறதால என்னோட மல்லிக்கு நல்ல விலை கிடைச்சுது. தேவை அதிகமா இருக்குங்கிறதையும் புரிஞ்சு கிட்டேன். அப்ப... ஆரம்பிச்சதுதான் மல்லித்தழை சாகுபடி... இன்னிக்கு அது ஒண்ணுதான் முழுக்க முழுக்க என் தோட்டத்து சாகுபடியா இருக்கு. மூணு ஏக்கர் முழுக்க அதைத்தான் போடுறோம். சொந்தமா வேன் வெச்சு மேட்டுப் பாளையம் மார்க்கெட்டுக்குக் கொண்டு போயிடறோம். விஷயம் வெற்றிகரமா போய்கிட்டு இருக்கு.
இதுல இருந்து மத்தவங்க தெரிஞ்சுக்கவேண்டியது... ஒரே விளை பொருளை ஒரே இடத்துல கொண்டு போய் விற்கக்கூடாது. தேவை எங்க இருக்குனு தேடிப்பிடிச்சி கொண்டுபோய் விற்பனை செய்தா லாபம் பார்க்கலாம். இதுக்குக் கொஞ்சம் சிரமம் எடுக்கணும்... அவ்வளவுதான். உள்ளூர் மார்க்கெட்டுலதான் விற்பேன்னு அடம்பிடிச்சிக்கிட்டிருந்தா, விலை சம்பலாகிப் போகும். கேட்ட விலைக்கு கொடுத்துப் புட்டு... மிக்சரும், டீயும் வாங்கிக் குடிச்சுப்புட்டு வெறும் கோணிப்பையோடதான் வீடு வந்து சேரமுடியும்...'' என்று கே.வி.மணி சொல்லிக் கொண்டிருக்கும்போதே தோட்டத்து மல்லித்தழைகள் கட்டுகட்டுகளாக வேனில் ஏறியிருந்தது. வேனை நகர்த்திக்கொண்டு அவர் மேட்டுப்பாளையம் நோக்கி நகர, அவருடைய அண்ணன் பாலசுப்ரமணி நம்மிடம் பேச ஆரம்பித்தார்.
''மல்லித்தழைய விளைவிக் கறதுதான் என்னோட வேலை. அதைக் கொண்டுபோய் வித்துப்புட்டு வர்றது மணியோட வேலை. நாங்க தோட்டத்துல போட்டிருக்கிறது வீரியரக மல்லி. 45 நாள்ல பலன் தரக்கூடிய குறுகிய காலப்பயிர். ஆரம்பத்துல.. நாட்டு மல்லிதான் போட்டுப் பார்த்தோம். அதுல ரசம் வெச்சா... சும்மா 'கமகம'னு மணக்கும். அந்த ஒண்ணுக்காகவே எல்லாரும் விரும்பி வாங்கு வாங்கனு மார்க்கெட்டுல கொண்டு போய் கூவிக்கூவிப் பார்த்தோம். விலை கேட்கறதுக்கு நாதியில்ல. அதுக்குப் பிறகுதான் வீரியரக மல்லிக்கு மாறிட்டோம். இப்ப எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லாம இருக்கு'' என்று சொன்னவர், சாகுபடி குறிப்புகளை எடுத்துப் போட்டார்.
மொத்தமாக 45 நாட்கள்தான் இந்த சாகுபடி. மண் 'பொல பொல'வென்று ஆகும் அளவுக்கு டிராக்டரை கொண்டு இரண்டு உழவு ஓட்டவேண்டும். அடுத்து, அடியுரமாக 3 லோடு கோழி எரு கொட்டவேண்டும். பிறகு, ஒரே சீராக பாத்தி அமைத்து, வீரிய ரக விதைகளை (9 கிலோ) பாத்தி முழுவதும் ஏகமாக தூவி விடவேண்டும். பின்னர் கொத்துமுனை அல்லது குச்சி மூலம் கீறி விடவேண்டும். அதன் பிறகு பாத்தி நிறையும் அளவில் தண்ணீர் பாய்ச்சுவது அவசியம். 5 முதல் 7 நாட்களில் துளிர் விட்டு முளைக்க ஆரம்பிக்கும். அப்போது 10 ஆட்களை விட்டு, களை எடுக்கவேண்டும். விதைத்த 3-ம் நாளுக்குள்ளாகவே சிலர் களைக் கொல்லி மருந்துகளை பயன்படுத்துகிறார்கள். அதைவிட கையால் களை எடுப்பதுதான் நல்லது.
தொடர்ந்து 5 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாசனம் தேவை. 15-ம் நாள் ஒன்றரை மூட்டை காம்ப்ளக்ஸ் உரத்தைப் பாசன தண்ணீரில் கரைத்து கொடுக்கவேண்டும். 20-ம் நாளில் களை எடுக்க வேண்டும். இதற்கும் 10 ஆட்கள் தேவைப்படுவார்கள். 25-ம் நாளில் 1 மூட்டை யூரியாவை பாசன நீரில் கரைத்துவிடலாம். இதையெல்லாம் செய்தால் மல்லித்தழை ‘குப்’பென்று வளரும். அதற்குப் பிறகு, தண்ணீர் மட்டும் அடிக்கடி பாய்ச்சினால் போதும். வேறு எதுவும் கொடுக்கத் தேவையில்லை. 45-ம் நாள் தளதளவென தழைத்து நிற்கும் மல்லித் தழைகளை ஜம்மென்று அறுவடை செய்யலாம்.
தொடர்ந்த பாலசுப்ரமணி, ''இதுக்கு... முட்டு வளி செலவுனு பார்த்தா ரொம்ப குறைச்சல்தான். இதையும் கூட நாங்க கம்மி பண்ணிக்கிட்டே இருக்கோம். இப்பவே... அடி உரமா கோழி எரு போடறதால, டி.ஏ.பி. தேவையில்லாம போயிடுச்சு. அதுபோலத் தான், மண்புழு உரம், தொழு உரம்னு மாத்திமாத்தி இயற்கை உரங்களை பயன்படுத்தப் போறோம். இதனால முட்டுவளி செலவுங்கறது ரொம்பவே குறைஞ்சி, லாபத்தை தானாவே அதிகரிக்கச் செய்யும்ங்கறதுல சந்தேகம் இல்லை.
வருஷம் முழுக்க மல்லித்தழை சாகுபடி செய்யலாம். எங்க ஏரியாவுல கிட்டத்தட்ட 2000 ஏக்கர்ல மல்லித்தழை சாகுபடி நடக்குது. களர், உவர் மண்ணைத் தவிர.. எல்லாவித நிலத்துலயும் இது நல்லா வளரும். செம்மண் நிலத்துல ரொம்ப சிறப்பாச் செய்யலாம்.
தை, மாசி, பங்குனி, சித்திரைனு 4 மாசமும் வெயில் கொளுத்தும். இது மல்லித்தழைக்கு அவ்வளவா ஆகாது. தென்னந்தோப்பு வெச்சிருக்கறவங்க, அதோட நிழல்ல சாகுபடி செய்யலாம். அப்படி வசதி இல்லாதவங்க, கொஞ்சம் கூடுதலா தண்ணி கொடுத்துப் பராமரிப்பு செய்யணும். இடுபொருள் விஷயத்துலயும் அதேபோல கவனம் செலுத்தினா போதும்... கணிசமா மகசூல் பாக்கலாம். கோடை காலத்துல ஏக்கருக்கு 1,000 கிலோ வரை மகசூல் குறைவாத்தான் கிடைக்கும். ஆனா, அந்த சீசன்ல சிரமப்பட்டு வளர்த்து கொண்டு வந்துட்டா, நல்ல விலைக்கு விக்கலாம். இந்த வருஷ கோடையில கிலோ 65 ரூபாய் வரைக்கும் அதிகபட்சமா விலை போயிருக்கு. சராசரியா ஏக்கருக்கு 8,000 கிலோ வரை அறுவடை செய்யலாம். இன்னிக்கு தேதியில மேட்டுப்பாளையம் மார்க்கெட் நிலவரப்படி கிலோ ஒண்ணுக்கு 8 ரூபாய் விலை கிடைக்குது. இதுவரைக்கும் கிலோ 5 ரூபாய்க்கும் குறைவான விலைக்கு ஒரு நாளும் நாங்க மல்லித்தழையை வித்ததில்லை. எங்களோட 3 ஏக்கர் நிலத்துல சுழற்சி முறையில சாகுபடி செய்றதால எப்பவுமே எங்க தோட்டத்துல மல்லித்தழை வாசனைதான்.
சொந்தமா வேன் வாங்கியிருந்தாலும் அதைச் சும்மா நிறுத்தி வைக்கறதில்ல. எங்களுக்கு வேலை இல்லாத மத்த நாட்கள்ல அக்கம் பக்கத்துல உள்ள விவசாயிகளோட மல்லிதழைகளை விலைபேசி மார்க்கெட்டுக்கு கொண்டு போறோம். அதுல ஒரு சின்ன லாபமும், வேன் வாடகையும் கிடைக்குது.
மொத்தத்துல ஒரு முறை போட்டுப்பார்த்தா... உங்க உள்ளத்தை கவர்ந்துடும் சொல்லி வெச்சி லாபம் அடிக்கற இந்த கொத்து மல்லி'' என்று கில்லியாக சொல்லி முடித்தார் பாலசுப்ரமணி.
தொடர்புக்கு :
கே.வி.மணி,
கருடமுத்தூர்,
திருப்பூர் வட்டம்.
அலைபேசி: 94862-42574.

Friday, February 5, 2016

கொறஞ்ச செலவுல எப்படி உளுந்து சாகுபடி

கொறஞ்ச செலவுல எப்படி உளுந்து சாகுபடி செஞ்சீங்கனு கேட்டாரு.. 
மழைக்கு முன்னாடி கத்தரி நாத்து விதைக்கறப்ப வாய்க்கா வரப்புனு காடு முழுசும் 2கிலோ உளுந்து வாங்கி வெதச்சோம்..உளுந்து காய்ப்புக்கு வந்ததும் நல்லா உளுந்து காய்ஞ்சதும் செடிய பிடுங்கீட்டு வந்து வீட்டில் ஒரு வாரம் போட்டிருந்தோம். அப்புறமா உளுந்த பிரிச்சு எடுத்துட்டு மற்ற செடி கொடி பொட்டுனு எல்லாத்தையும் காட்டுக்குள்ளயே கொண்டு போய் போட்டுட்டோம்.. எங்க ஊருல எல்லா விவசாயியும் இப்படி தா அறுவடை செஞ்சாங்க.. எங்க வீட்டுல ஆடு மாடும் இல்ல .. எங்க அப்பா அம்மா ஆர்கானிக் விவசாயமும் பண்ணல.. ஆனா உளுந்து சாகுபடிக்கு ஆர்கானிக் முறைனு ஒன்னு இல்ல.. விதைய நட்டுட்டு அறுவடை மட்டும்தா.. தனிப்பயிரா பண்ணாம ஊடுபயிரா நாங்க பண்ணுனோம்.. இனி உளுந்த சுத்தம் செஞ்சு என்னோட நண்பர்களுக்கு ஒரு மனுவு ரெண்டு மனுவுனு கொடுத்துட்டா விற்பனையும் முடுஞ்சுது..



ஜீரோ பட்ஜெட் உளுந்து சாகுபடி டிப்ஸ் !!!!!!!


ஜீரோ பட்ஜெட் உளுந்து சாகுபடி பற்றி தஞ்சாவூர் மாவட்டம் புன்னைநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராமலிங்கம் தகவல் தருகிறார்.
தேர்வு செய்யப்பட்ட நிலத்தை இரண்டுசால் புழுதி உழவு செய்ய வேண்டும். 150 கிலோ கன ஜீவாமிர்தத்தை 200 லிட்டர் ஜீவாமிர்தத்தில் கலந்து புட்டு பதத்திற்கு பிசைந்து வயல் முழுக்க பரவலாக தெளிக்க வேண்டும்.
கன ஜீவாமிர்தம் பறக்காமல் இருக்கவும் அதன் வீரியத்தை அதிகப்படுத்துவதற்கும் ஜீவாமிர்தத்தைக் கலந்து தெளிக்க வேண்டும். பின்பு 20 அடி நீளம் 15 அடி அகலம் கொண்ட பாத்திகள் அமைத்து 7 கிலோ ஆடுதுறை-5 ரக விதை உளுந்தை ஜீவாமிர்த கரைசலில் அமிழ்த்தி விதைநேர்த்தி செய்து, பரவலாக தெளித்து ரோட்டோ வேட்டர் மூலம் மேலோட்டமாக ஒரு சால் உழவு ஓட்ட வேண்டும்.
தொடர்ந்து காய்ச்சலும், பாய்ச்சலுமாக தண்ணீர் கட்டி வரவேண்டும். 7ம் நாள் 50 லிட்டர் ஜீவாமிர்தத்தை 80 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
15-ம் நாள் 5 லிட்டர் அக்னி அஸ்திரத்தை 120 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். 35-ம் நாள் இதே அளவு ஜீவாமிர்தம் தெளிக்க வேண்டும். 45ம் நாள் 5லிட்டர் தேமோர்க்கரைசலை 115 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். மாலை நேரங்களிலேயே தெளிக்க வேண்டும். 65 நாட்களில் உளுந்து அறுவடைக்கு வந்து விடும்.
ஜீவாமிர்தம்:
பசுஞ்சாணம் 10 கிலோ, மாட்டுச் சிறுநீர் 10 லிட்டர், வெல்லம் 2 கிலோ, பயறு மாவு (உளுந்து, துவரை ஏதாவது ஒன்று) 2 கிலோ, தண்ணீர் 200 லிட்டர் ஒரு கைப்பிடி நிலத்தின் மண் சேர்த்து பிளாஸ்டிக் கேனில் 48 மணி நேரம் வைத்திருக்க வேண்டும். பிளாஸ்டிக் கேனை மரத்தின் நிழலில் வைக்க வேண்டியது முக்கியம். காலை, மதியம், மாலை என்று மூன்று முறை இதை கலக்கி விட்டு வந்தால் ஜீவாமிர்தம் தயார். இது ஒரு நாளுக்கான அளவு. இதை பயிர் வளர்ச்சி ஊக்கியாக பாசன நீரிலேயே கலந்து விடலாம்.
கன ஜீவாமிர்தம்:
பசுஞ்சாணம் 100 கிலோ, 2 கிலோ வெல்லம், 2 கிலோ பயறு மாவு போதும். இதையெல்லாம் ஒன்றாகக் கலந்து கொள்ளவும். கூடவே உப்புமா பதம் வருவதற்கு எவ்வளவு தேவையோ அவ்வளவுக்கு நாட்டு மாட்டுச் சிறுநீரை கலந்தால் போதும். பின்பு உருட்டி நிழலில் காயவைத்து தேவைப்படும் போது உதிர்த்துப் பயன்படுத்தலாம்.
இது மானாவாரி நிலங்களுக்கு ஏற்றது. மகசூல் ஏக்கருக்கு 5 குவிண்டால் உளுந்து ரூ.1 லட்சத்து 52 ஆயிரம் வருமானம் கிடைக்கும் என்றார் விவசாயி.
தொடர்புக்கு : ராமலிங்கம், அலைபேசி :
07871126888.
நன்றி: தினமலர்.
தொகுப்பு : வானக வானம்பாடிகள் முகநூல் குழு.

Sunday, January 10, 2016

இயற்கை விவசாயம் குழுமம்

அன்பு நண்பர்களே, ஓர் வேண்டுகோள்; 

ஈரோடு மற்றும் சுற்று வட்டாரத்தில், சுமார் ஈரோட்டிலிருந்து 50 km தொலைவிற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு எங்கள் விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனத்தின் மூலம் விவசாயிகளும், நுகர்வோரும் பயன் பெறக்கூடிய திட்டத்தை உருவாக்கி உள்ளோம். இயற்கை முறையில் நஞ்சில்லா காய்கறிகள் உற்பத்தி செய்து தர தயாராக உள்ள விவசாயிகளுக்கு பயிர்ச்சி அளித்து அவர்களுக்கு விதைகளும் வழங்கி, அவர்கள் விளைய வைத்த நஞ்சில்லா காய்கறிகளை நிறுவனத்தின் மூலம் எடுத்து, அதனை நுகர்வோருக்கு நியாயமான விலையில் நேரிடையாக விற்பனை செய்ய போகிறோம். விவசாயிகளுக்கு இயற்கை இடு பொருட்கள், பூச்சி விரட்டிகள் தயாரிக்க களபயிச்சி கொடுக்க தயாராக இருக்கிறோம். ஒவ்வொரு விவசாயியும் ஒரு ஏக்கருக்குள் காய்கறி சாகுபடி செய்வதன் மூலம் தினசரி 1000 ரூபாய் வரை வருமானம் ஈட்ட முடியும். அதற்கான வழிமுறைகளை கற்றுத்தர தயாராக இருக்கிறோம். (பீன்ஸ், கேரட், கோஸ், பீட்ரூட் போன்ற மலைக்காய்கறிகள் இயற்கை முறையில் விளைய வைப்பவர்கள் யாராவது இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளவும்) எங்களுடன் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன்பெற விரும்பும் நண்பர்களும் அல்லது திட்டத்தில் உங்கள் விவசாய நண்பர்களை இணைத்து பயன்பெற விரும்பினாலும் எங்களை தொடர்பு கொள்ளலாம்,
தொடர்பு எண்கள்- 8903443247, 9750998888, 9047069607.
'உங்களுக்கும், அனைத்து நுகர்வோருக்கும் நஞ்சில்லா காய்கறிகள் கிடைக்க, விவசாயிகளுக்கு இந்த தகவல் சென்று சேருமாறு அதிக அளவில் ஷேர் செய்ய வேண்டுகிறேன்'. நன்றி. - செந்தில்நாதன்


https://www.facebook.com/groups/iyarkaivivasayam/

Monday, January 4, 2016

projects works- Bike buncher

https://www.facebook.com/vettypayapullasangam/videos/1792294557664433/