மல்லி...‘ சொல்லி அடிக்கும் ‘கில்லி!‘
நிச்சய லாபம் தரும் சாகுபடி..
10 நாட்களில் நீங்களும் பணக்காரர் ஆகலாம்!', ‘30 நாட்களில் 3 லட்சம் சம்பாதிக்கலாம் வாங்க!', '40 நாளில் 4 லட்சம் ஈட்டுவது எப்படி?'
இப்படி உங்களை லட்சாதிபதிகளாகவும், கோடீஸ்வரர்களாகவும், மாற்றும் வண்ணம் தன்னம்பிக்கையைத் தட்டி எழுப்பும் புத்தகங்களை இந்த உடன்பிறப்புக்கள் வாசித்ததில்லை. இருந்தாலும் '45 நாட்களில் நல்ல வருமானம் பார்க்க முடியும்' என்பதை விவசாயத்தில் நிரூபித்துக் கொண்டுள்ளனர். அவர்கள் கையில் எடுத்திருப்பது லாபம் தரும் கொத்துமல்லித்தழைச் சாகுபடி. இதில் சொல்லி வைத்து கில்லி அடிக்கும் அந்த உடன்பிறப்புக்களை, ‘மல்லி பிரதர்ஸ்’ என்றே இப்பகுதி மக்கள் அழைக்கின்றனர். கே.வி. மணி மற்றும் பாலசுப்ரமணி என்கிற அந்தச் சகோதரர்களை கோவை மாவட்டம், பொங்கலூர் அருகில் உள்ள கருடமுத்தூர் கிராமத்தில் இருக்கும் அவர்களின் வயல்காட்டில் சந்தித்தோம்.
பெண்கள் பலரும் பாத்திகளில் இருந்து மல்லித்தழைகளை பறித்து கட்டுகளாக்கிக் கொண்டிருக்க... ''ம்... ஆகட்டும். மார்க்கெட்டுக்கு நேரமாச்சு’’ என்று உசுப்பிவிட்டபடி நின்ற கே.வி.மணி, அப்படியே நம் பக்கம் திரும்பி,
''ஆரம்பத்துல பருத்தி, வெங்காயம், வாழை, மஞ்சள்னு எல்லாரையும் போல பயிர் செய்துகிட்டிருந்தோம். உரம், பூச்சி மருந்து, ஆள் கூலி எல்லாம் ரொம்ப அதிகமாகிக்கிட்டே போகுது. மூணு ஏக்கர் வெச்சுக்கிட்டு விவசாயம் பார்க்கற சிறு விவசாயியான எங்களால தாக்குப்பிடிக்க முடியல. குறைஞ்ச நாள்ல பலன் தர்றது காய்கறிகள்தான்னு முடிவெடுத்து, கால் ஏக்கர் அளவுக்கு கொத்துமல்லித்தழையைப் போட்டோம். நாங்களே அறுவடை பண்ணி, திருப்பூர் காய்கறி மார்க்கெட்டுல இருக்கற கமிஷன் கடைகள்ல கொடுக்க ஆரம்பிச்சோம். வேன் வாடகை, கமிஷன் இதெல்லாம் போக... ஓரளவு வருமானம் கிடைச்சுது. பெரிசா சொல்லிக்கிற மாதிரியில்ல. திருப்பூர் பகுதியை ஒட்டி விவசாயிங்க நிறைய பேர் மல்லித்தழை சாகுபடி செய்றாங்க. அதெல்லாம் திருப்பூர் மார்க்கெட்டுக்குதான் வரும். அதேபோல, வெளியூர் வியாபாரிகள் வரத்தும் அங்கே குறைவு. அதனாலதான் எதிர்பார்த்த அளவுக்கு விலை கிடைக்கலை.
இதைப்பத்தி யோசிச்சிக்கிட்டிருந்தப்ப 'மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுக்கு கேரளா வியாபாரிங்க நிறையப் பேர் வர்றாங்க. மேட்டுப்பாளையம் பகுதியில மல்லித்தழை சாகுபடி குறைவுங்கறதால அந்த மார்க்கெட்டுல நல்ல லாபம் கிடைக்கும்'னு ஒருத்தர் சொன்னார்.
அடுத்தநாளே மல்லித்தழைக் கட்டுகளை பஸ்ஸுல ஏத்தி, 100 கி.மீ. தொலைவுல இருக்கற மேட்டுப் பாளையம் மார்க்கெட்டுக்குக் கொண்டு போனேன். அது, ரொம்பப் பெரிய மார்க்கெட். ஊட்டி, மதுரை, திருச்சினு வெளியூர்கள்ல இருந்தும் கேரளா, கர்நாடகானு வெளிமாநிலங்கள்ல இருந்தும் நிறைய வியாபாரிங்க வந்துபோறதால என்னோட மல்லிக்கு நல்ல விலை கிடைச்சுது. தேவை அதிகமா இருக்குங்கிறதையும் புரிஞ்சு கிட்டேன். அப்ப... ஆரம்பிச்சதுதான் மல்லித்தழை சாகுபடி... இன்னிக்கு அது ஒண்ணுதான் முழுக்க முழுக்க என் தோட்டத்து சாகுபடியா இருக்கு. மூணு ஏக்கர் முழுக்க அதைத்தான் போடுறோம். சொந்தமா வேன் வெச்சு மேட்டுப் பாளையம் மார்க்கெட்டுக்குக் கொண்டு போயிடறோம். விஷயம் வெற்றிகரமா போய்கிட்டு இருக்கு.
இதுல இருந்து மத்தவங்க தெரிஞ்சுக்கவேண்டியது... ஒரே விளை பொருளை ஒரே இடத்துல கொண்டு போய் விற்கக்கூடாது. தேவை எங்க இருக்குனு தேடிப்பிடிச்சி கொண்டுபோய் விற்பனை செய்தா லாபம் பார்க்கலாம். இதுக்குக் கொஞ்சம் சிரமம் எடுக்கணும்... அவ்வளவுதான். உள்ளூர் மார்க்கெட்டுலதான் விற்பேன்னு அடம்பிடிச்சிக்கிட்டிருந்தா, விலை சம்பலாகிப் போகும். கேட்ட விலைக்கு கொடுத்துப் புட்டு... மிக்சரும், டீயும் வாங்கிக் குடிச்சுப்புட்டு வெறும் கோணிப்பையோடதான் வீடு வந்து சேரமுடியும்...'' என்று கே.வி.மணி சொல்லிக் கொண்டிருக்கும்போதே தோட்டத்து மல்லித்தழைகள் கட்டுகட்டுகளாக வேனில் ஏறியிருந்தது. வேனை நகர்த்திக்கொண்டு அவர் மேட்டுப்பாளையம் நோக்கி நகர, அவருடைய அண்ணன் பாலசுப்ரமணி நம்மிடம் பேச ஆரம்பித்தார்.
''மல்லித்தழைய விளைவிக் கறதுதான் என்னோட வேலை. அதைக் கொண்டுபோய் வித்துப்புட்டு வர்றது மணியோட வேலை. நாங்க தோட்டத்துல போட்டிருக்கிறது வீரியரக மல்லி. 45 நாள்ல பலன் தரக்கூடிய குறுகிய காலப்பயிர். ஆரம்பத்துல.. நாட்டு மல்லிதான் போட்டுப் பார்த்தோம். அதுல ரசம் வெச்சா... சும்மா 'கமகம'னு மணக்கும். அந்த ஒண்ணுக்காகவே எல்லாரும் விரும்பி வாங்கு வாங்கனு மார்க்கெட்டுல கொண்டு போய் கூவிக்கூவிப் பார்த்தோம். விலை கேட்கறதுக்கு நாதியில்ல. அதுக்குப் பிறகுதான் வீரியரக மல்லிக்கு மாறிட்டோம். இப்ப எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லாம இருக்கு'' என்று சொன்னவர், சாகுபடி குறிப்புகளை எடுத்துப் போட்டார்.
மொத்தமாக 45 நாட்கள்தான் இந்த சாகுபடி. மண் 'பொல பொல'வென்று ஆகும் அளவுக்கு டிராக்டரை கொண்டு இரண்டு உழவு ஓட்டவேண்டும். அடுத்து, அடியுரமாக 3 லோடு கோழி எரு கொட்டவேண்டும். பிறகு, ஒரே சீராக பாத்தி அமைத்து, வீரிய ரக விதைகளை (9 கிலோ) பாத்தி முழுவதும் ஏகமாக தூவி விடவேண்டும். பின்னர் கொத்துமுனை அல்லது குச்சி மூலம் கீறி விடவேண்டும். அதன் பிறகு பாத்தி நிறையும் அளவில் தண்ணீர் பாய்ச்சுவது அவசியம். 5 முதல் 7 நாட்களில் துளிர் விட்டு முளைக்க ஆரம்பிக்கும். அப்போது 10 ஆட்களை விட்டு, களை எடுக்கவேண்டும். விதைத்த 3-ம் நாளுக்குள்ளாகவே சிலர் களைக் கொல்லி மருந்துகளை பயன்படுத்துகிறார்கள். அதைவிட கையால் களை எடுப்பதுதான் நல்லது.
தொடர்ந்து 5 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாசனம் தேவை. 15-ம் நாள் ஒன்றரை மூட்டை காம்ப்ளக்ஸ் உரத்தைப் பாசன தண்ணீரில் கரைத்து கொடுக்கவேண்டும். 20-ம் நாளில் களை எடுக்க வேண்டும். இதற்கும் 10 ஆட்கள் தேவைப்படுவார்கள். 25-ம் நாளில் 1 மூட்டை யூரியாவை பாசன நீரில் கரைத்துவிடலாம். இதையெல்லாம் செய்தால் மல்லித்தழை ‘குப்’பென்று வளரும். அதற்குப் பிறகு, தண்ணீர் மட்டும் அடிக்கடி பாய்ச்சினால் போதும். வேறு எதுவும் கொடுக்கத் தேவையில்லை. 45-ம் நாள் தளதளவென தழைத்து நிற்கும் மல்லித் தழைகளை ஜம்மென்று அறுவடை செய்யலாம்.
தொடர்ந்த பாலசுப்ரமணி, ''இதுக்கு... முட்டு வளி செலவுனு பார்த்தா ரொம்ப குறைச்சல்தான். இதையும் கூட நாங்க கம்மி பண்ணிக்கிட்டே இருக்கோம். இப்பவே... அடி உரமா கோழி எரு போடறதால, டி.ஏ.பி. தேவையில்லாம போயிடுச்சு. அதுபோலத் தான், மண்புழு உரம், தொழு உரம்னு மாத்திமாத்தி இயற்கை உரங்களை பயன்படுத்தப் போறோம். இதனால முட்டுவளி செலவுங்கறது ரொம்பவே குறைஞ்சி, லாபத்தை தானாவே அதிகரிக்கச் செய்யும்ங்கறதுல சந்தேகம் இல்லை.
வருஷம் முழுக்க மல்லித்தழை சாகுபடி செய்யலாம். எங்க ஏரியாவுல கிட்டத்தட்ட 2000 ஏக்கர்ல மல்லித்தழை சாகுபடி நடக்குது. களர், உவர் மண்ணைத் தவிர.. எல்லாவித நிலத்துலயும் இது நல்லா வளரும். செம்மண் நிலத்துல ரொம்ப சிறப்பாச் செய்யலாம்.
தை, மாசி, பங்குனி, சித்திரைனு 4 மாசமும் வெயில் கொளுத்தும். இது மல்லித்தழைக்கு அவ்வளவா ஆகாது. தென்னந்தோப்பு வெச்சிருக்கறவங்க, அதோட நிழல்ல சாகுபடி செய்யலாம். அப்படி வசதி இல்லாதவங்க, கொஞ்சம் கூடுதலா தண்ணி கொடுத்துப் பராமரிப்பு செய்யணும். இடுபொருள் விஷயத்துலயும் அதேபோல கவனம் செலுத்தினா போதும்... கணிசமா மகசூல் பாக்கலாம். கோடை காலத்துல ஏக்கருக்கு 1,000 கிலோ வரை மகசூல் குறைவாத்தான் கிடைக்கும். ஆனா, அந்த சீசன்ல சிரமப்பட்டு வளர்த்து கொண்டு வந்துட்டா, நல்ல விலைக்கு விக்கலாம். இந்த வருஷ கோடையில கிலோ 65 ரூபாய் வரைக்கும் அதிகபட்சமா விலை போயிருக்கு. சராசரியா ஏக்கருக்கு 8,000 கிலோ வரை அறுவடை செய்யலாம். இன்னிக்கு தேதியில மேட்டுப்பாளையம் மார்க்கெட் நிலவரப்படி கிலோ ஒண்ணுக்கு 8 ரூபாய் விலை கிடைக்குது. இதுவரைக்கும் கிலோ 5 ரூபாய்க்கும் குறைவான விலைக்கு ஒரு நாளும் நாங்க மல்லித்தழையை வித்ததில்லை. எங்களோட 3 ஏக்கர் நிலத்துல சுழற்சி முறையில சாகுபடி செய்றதால எப்பவுமே எங்க தோட்டத்துல மல்லித்தழை வாசனைதான்.
தை, மாசி, பங்குனி, சித்திரைனு 4 மாசமும் வெயில் கொளுத்தும். இது மல்லித்தழைக்கு அவ்வளவா ஆகாது. தென்னந்தோப்பு வெச்சிருக்கறவங்க, அதோட நிழல்ல சாகுபடி செய்யலாம். அப்படி வசதி இல்லாதவங்க, கொஞ்சம் கூடுதலா தண்ணி கொடுத்துப் பராமரிப்பு செய்யணும். இடுபொருள் விஷயத்துலயும் அதேபோல கவனம் செலுத்தினா போதும்... கணிசமா மகசூல் பாக்கலாம். கோடை காலத்துல ஏக்கருக்கு 1,000 கிலோ வரை மகசூல் குறைவாத்தான் கிடைக்கும். ஆனா, அந்த சீசன்ல சிரமப்பட்டு வளர்த்து கொண்டு வந்துட்டா, நல்ல விலைக்கு விக்கலாம். இந்த வருஷ கோடையில கிலோ 65 ரூபாய் வரைக்கும் அதிகபட்சமா விலை போயிருக்கு. சராசரியா ஏக்கருக்கு 8,000 கிலோ வரை அறுவடை செய்யலாம். இன்னிக்கு தேதியில மேட்டுப்பாளையம் மார்க்கெட் நிலவரப்படி கிலோ ஒண்ணுக்கு 8 ரூபாய் விலை கிடைக்குது. இதுவரைக்கும் கிலோ 5 ரூபாய்க்கும் குறைவான விலைக்கு ஒரு நாளும் நாங்க மல்லித்தழையை வித்ததில்லை. எங்களோட 3 ஏக்கர் நிலத்துல சுழற்சி முறையில சாகுபடி செய்றதால எப்பவுமே எங்க தோட்டத்துல மல்லித்தழை வாசனைதான்.
சொந்தமா வேன் வாங்கியிருந்தாலும் அதைச் சும்மா நிறுத்தி வைக்கறதில்ல. எங்களுக்கு வேலை இல்லாத மத்த நாட்கள்ல அக்கம் பக்கத்துல உள்ள விவசாயிகளோட மல்லிதழைகளை விலைபேசி மார்க்கெட்டுக்கு கொண்டு போறோம். அதுல ஒரு சின்ன லாபமும், வேன் வாடகையும் கிடைக்குது.
மொத்தத்துல ஒரு முறை போட்டுப்பார்த்தா... உங்க உள்ளத்தை கவர்ந்துடும் சொல்லி வெச்சி லாபம் அடிக்கற இந்த கொத்து மல்லி'' என்று கில்லியாக சொல்லி முடித்தார் பாலசுப்ரமணி.
தொடர்புக்கு :
கே.வி.மணி,
கருடமுத்தூர்,
திருப்பூர் வட்டம்.
அலைபேசி: 94862-42574.
கே.வி.மணி,
கருடமுத்தூர்,
திருப்பூர் வட்டம்.
அலைபேசி: 94862-42574.
No comments:
Post a Comment